நள்ளிரவில் குடிசைக்கு தீவைத்து திமுக நிர்வாகி, மனைவி எரித்துக்கொலை: செங்கம் அருகே பயங்கரம்

செங்கம்: செங்கம் அருகே நள்ளிரவில் குடிசைக்கு தீவைத்து தம்பதி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (51). பக்கிரிபாளையம் ஊராட்சி முன்னாள் வார்டு உறுப்பினரான இவர், திமுக தேர்தல் பணிக்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார்.

இவரது மனைவி தமிழரசி. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழரசி பிரிந்து சென்றுவிட்டார். தமிழரசி தனது 3 பிள்ளைகளுடன் பெங்களூருவில் வசிக்கிறார். இதேபோல் தீர்த்தாண்டபட்டு கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம் (46) என்ற பெண் அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 3 பிள்ளைகளை கணவனிடம் விட்டுவிட்டு வந்து தனியாக வசித்து வந்தார்.

இவரை சக்திவேல் 2வதாக திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சக்திவேல் மற்றும் அமிர்தம் ஆகியோர் அப்பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். விவசாய நிலத்தில் ஓலைக்குடிசை கட்டி வசித்தனர். இந்நிலையில் சக்திவேல், அமிர்தம் இருவரும் நேற்று முன்தினம் இரவு குடிசையில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு யாரோ மர்ம ஆசாமிகள், குடிசையின் கதவை வெளிப்பக்கமாக பூட்டு போட்டு பூட்டிவிட்டு குடிசை மீதும், வீட்டுக்குள்ளேயும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.

தீ மளமளவென பற்றி எரிந்தது. தூக்கத்தில் இருந்து எழுந்த சக்திவேல், அமிர்தம் ஆகியோர் அலறியபடியே வெளியே ஓடி வர முயன்றுள்ளனர். ஆனால் கதவு பூட்டப்பட்டிருந்ததால் வெளியே வர முடியவில்லை. இதனால் இருவரும் தீயில் கருகி இறந்தனர். இந்நிலையில் நேற்று காலை அவ்வழியாக சென்ற விவசாயிகள் குடிசையுடன் இருவரும் கருகி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலறிந்து செங்கம் போலீசார் வந்து, இருவரின் கரிக்கட்டையான உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இருவரையும் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற கொலையாளிகள் யார், கொலைக்கான காரணம் என்ன என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடிசைக்கு தீ வைத்து விவசாயி, அவரது 2வது மனைவி உயிரோடு தீ வைத்து எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: