சென்னை: ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்த முதலீடுகளில் தமிழ்நாட்டுக்கு மட்டும் ரூ.27,166 கோடி முதலீடு கிடைத்துள்ளது என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ்தள பதிவு: தமிழ்நாட்டில் மின்னணு உற்பத்தி துறையில் 3 திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மூன்று திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டில் 23,451 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நாடு முழுவதும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ள 22 திட்டங்கள் மூலம் 34,061 வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்த 22 திட்டங்கள் மூலம் கிடைக்கும் மொத்த வேலை வாய்ப்புகளில் 69 சதவீதம் வேலைவாய்ப்பு தமிழ்நாட்டுக்கே கிடைத்துள்ளது.
ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்த மொத்த முதலீடான ரூ.41,863 கோடி மதிப்புள்ள முதலீடுகளில், மதர்சன், பாக்ஸ்கான் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் வழியாக தமிழ்நாட்டில் ரூ.27,166 கோடி முதலீடுகள் செய்ய உள்ளன. இதன் மூலம் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 1,500 பேருக்கும், மதர்சன் நிறுவனத்தில் 5,741 பேருக்கும், பாக்ஸ்கான் நிறுவனம் புதிய முதலீடு செய்வதன் மூலம் உயர்ந்த சம்பளத்தில் 16,210 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
இது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிலையான கொள்கை மற்றும் செயல்படுத்தல் சார்ந்த நிர்வாகத்தை பிரதிபலிக்கிறது. இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
