ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு விதிக்கப்படும் மீனவர்களுக்கான அபராதத்துக்கு இந்தியா பொறுப்பேற்காது என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படை அடுத்தடுத்து கைது செய்து உள்ளது, மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர், பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்த திடீர் மீனவர்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் பாம்பன், தங்கச்சிமடம், ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவ மக்கள் கலந்து கொண்டனர். இதில் மீனவ பெண்கள் தங்களின் குறைகள் குறித்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்த அமைச்சர், ‘‘இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு அந்நாட்டில் விதிக்கப்படும் அபராதத்திற்கு இந்தியா பொறுப்பேற்காது. இது இந்திய அரசின் குற்றம் கிடையாது. அனைவருக்குமான அபராதத் தொகையை இந்திய அரசு செலுத்தி விட்டால், மீண்டும் மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் செல்லாமல் இருப்பார்களா?
அதற்கு அவர்கள் உத்தரவாதம் கொடுக்க முடியுமா’’ என கேள்வி எழுப்பினார். ஒன்றிய அமைச்சரின் இந்தப் பேச்சு, மீனவர்களை கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைய செய்திருக்கிறது. ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சரின் பேச்சுக்கு மீனவ சமுதாய மக்கள் கடும் கண்டனத்தையும் தெரித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் நலனில் சிறப்பாக கையாண்டு அவர்களை பாதுகாப்பதாக ஒன்றிய அரசு அடிக்கடி கூறி வரும் நிலையில், மீனவர்களின் அபராததுக்கு இந்தியா பொறுப்பேற்காது என ஒன்றிய அமைச்சர் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
