சேலம்: ஏற்காடு காபி தோட்டத்திற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துவிட்டு, இன்ஸ்டாகிராம் காதலியை கொன்று கணவனுக்கு தாலியை அனுப்பியதாக கைதான கள்ளக்காதலன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சேலம் மாவட்டம், ஏற்காடு மாரமங்கலம் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (28) லாரி டிரைவர். இவரது மனைவி சுமதி (24). திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. கடந்த 23ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சுமதி, திரும்பி வரவில்லை.
இதுகுறித்து ஏற்காடு போலீசில் சண்முகம் புகார் அளித்தார். இந்நிலையில், மாரமங்கலம் மலைக்கிராமத்திற்கு வந்த பஸ் டிரைவர், ஒரு பார்சலை அங்குள்ள மளிகைக்கடையில் கொடுத்து, சண்முகத்திடம் வழங்குமாறு கூறியுள்ளார். அதன்படி சண்முகத்திடம் ஒப்படைக்கப்பட்ட பார்சலில் சுமதி அணிந்திருந்த தாலி இருந்துள்ளது. உடனே இதனை கொடுத்தனுப்பியது யார்? என அந்த டிரைவரிடம் சண்முகம் விசாரித்தபோது, மாரமங்கலம் மலைக்கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் வெங்கடேஷ் (22) என்பவர் கொடுத்து அனுப்பியது தெரியவந்தது.
அவரிடம் சென்று கேட்டபோது, உன் மனைவி சுமதி, இந்த தாலியை கழற்றி கொடுத்துவிட்டு உன்னோடு வாழ முடியாது எனக்கூறி எங்கோ சென்றுவிட்டார். யாருடன் சென்றார்? எனத்தெரியாது எனக்கூறியுள்ளார். இதையடுத்து அவர் மீது சந்தேகம் கொண்டு, போலீசாரிடம் வெங்கடேசை பிடித்து விசாரிக்கும்படி சண்முகம் கூறியுள்ளார். இதன்பேரில், போலீசார் வெங்கடேசை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அதில் அவர், தனக்கும், சுமதிக்கும் இடையே தகாத உறவு இருந்தது, அவரை கடந்த 23ம் தேதி கொலை செய்து, சாக்குமூட்டையில் கட்டி ஏற்காடு குப்பனூர் சாலையில் முனியப்பன்கோயிலை அடுத்த வளைவில் இருக்கும் 300 அடி பள்ளத்தில் வீசியதாக தெரிவித்துள்ளார். உடனடியாக போலீசார் சென்று சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்டிருந்த சுமதியின் சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதை தொடர்ந்து கைதான வெங்கடேஷ் அளித்த பரபரப்பு வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: மாரமங்கலத்தை சேர்ந்த சுமதி, இன்ஸ்டாகிராம் மூலம் வெங்கடேசுக்கு பழக்கமாகி, பின்னர் நேரில் பார்த்து நெருங்கியுள்ளனர். சண்முகம் லாரி ஓட்டி சென்றதும், அந்த பகுதியில் உள்ள தனது அரை ஏக்கர் காபி தோட்டத்திற்கு சுமதியை அடிக்கடி வரவழைத்து வெங்கடேஷ் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
ஓராண்டாக இது நீடித்த நிலையில், கடந்த ஒரு மாதமாக வெங்கடேசின் போன் அழைப்பை சுமதி தவிர்த்துள்ளார். மேலும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களையும், போனையும் ரகசிய குறியீடுடன் கூடிய லாக் போட்டு வைத்துள்ளார். அதனை அறிந்து, உனக்கு வேறு நபர்களோடு தொடர்பு இருக்கிறதா என சந்தேகத்தில் கேட்டு வெங்கடேஷ் தகராறு செய்துள்ளார்.
இதுவரையில் இன்ஸ்டா சுமதிக்கு ரூ.1லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளார். ஆனால் அவர் வேறு நபர்களுடன் போனில் பேசி வந்தது, அவருக்கு ஆத்திரமூட்டியது. சம்பவத்தன்று (23ம்தேதி) மதியம் சுமதியை காபி தோட்டத்திற்கு வரவழைத்து இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் செல்போனை லாக் விவகாரம் குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரத்தில் துப்பட்டாவால் சுமதியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து தங்க தாலியை மட்டும் கழற்றி எடுத்துவிட்டு, காபி கொட்டை கட்டும் சாக்குப்பையில் போட்டு கட்டி, பைக்கில் ஏற்றி குப்பனூர் மலைப்பாதையில் 6 கி.மீ. தூரம் சென்று முனியப்பன் கோயில் அருகே வளைவில் உள்ள பள்ளத்தில் இறங்கி, தூரமாக தூக்கி வீசியுள்ளார். பின்னர் தாலியை பார்சலில் அனுப்பி வைத்து, வேறு நபருடன் அவர் ஓடிவிட்டார் எனக்கூறினால் நம்பி விடுவார்கள் என நாடகம் ஆடியுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
* ஒரே பெண்ணுக்கு 2 பேர் போட்டி வடமாநில வாலிபர் குத்திக்கொலை
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் தீபக்குமார் (26). இவர், திருப்பூர் ராக்கியாபாளையம் அடுத்த வள்ளியம்மை நகரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தீபக்குமார் ஒரு வடமாநில பெண்ணுடன் பேசி பழகி வந்தார். நாளடைவில் அது காதலாக மாறியது. இந்நிலையில், அதே பகுதியில் தங்கி மற்றொரு கம்பெனியில் வேலை பார்த்து வரும் பீகாரை சேர்ந்த விக்ரம்குமார் (27) என்பவரும் அதே பெண்ணை காதலித்து வந்தார்.
இதனால், தீபக்குமாருக்கும், விக்ரம்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை இருவரும் சந்தித்து அந்த பெண்ணை காதலிப்பது யார் என்பது குறித்து பேசி உள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த விக்ரம்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் தீபக்குமாரை சரமாரியாக குத்தினார். இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விக்ரம்குமாரை கைது செய்தனர்.
