எரிசக்தி துறையின் கீழ் ரூ.13,076 கோடி மதிப்பீட்டிலான உடன்குடி அனல்மின் திட்ட பணி ஜனவரிக்குள் பயன்பாட்டிற்கு வரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: எரிசக்தி துறையின் கீழ் ரூ.13,076.71 கோடி மதிப்பில் நடந்து வரும் 2×660 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி அனல் மின் திட்ட பணிகள் ஜனவரிக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, எரிசக்தி துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை மற்றும் பொதுப்பணித் துறை ஆகிய துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து தொடர்புடைய துறைச் செயலாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

எரிசக்தி துறையின் கீழ், ரூ.13,076.71 கோடியில் நடந்து வரும் 2×660 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி அனல் மின் திட்ட பணிகள் ஜனவரி, 2026க்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும், வரும் கோடை காலத்தில் மாநிலம் முழுவதும் தடையின்றி சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென்றும் முதல்வர் உத்தரவிட்டார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ், ரூ.110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை பணிகள் பிப்ரவரி 2026க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட முதல்வர் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில், தலைமை செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன், பொதுப்பணித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளர் பிரதீப் யாதவ், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் செந்தில்குமார், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண்ராய், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை செயலாளர் அமுதவல்லி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: