காதல் திருமணம் பங்குச்சந்தை மாதிரி ஏற்றமும் இருக்கும்; இறக்கமும் இருக்கும்: ஆட்கொணர்வு வழக்கில் ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: காதல் திருமணம் பங்குச்சந்தை மாதிரி ஏற்றமும் இருக்கும்; இறக்கமும் இருக்கும் என்று ஆட்கொணர்வு வழக்கில் ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். திருச்சியை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினார். விடுமுறையை முன்னிட்டு வீட்டிற்கு வந்த அந்த பெண் திடீரென மாயமானார். அவரது பெற்றார், அந்த பெண் பணிபுரியும் மருத்துவமனையை தொடர்பு கொண்டனர். ஆனால், அங்கே அவர் வரவில்லை என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தனது மகளை காணவில்லை எனக் கூறி அவரது பெற்றோர் திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர் கிடைக்காத நிலையில், தங்களது மகளை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், மாயமான பெண்ணை கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், ஆர்.ஜோதிராமன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட அந்தப் பெண் செவிலியர், வீடியோ கான்பரன்சில் நீதிபதிகள் முன் ஆஜரானார்.

அவரிடம் நீதிபதிகள், ‘இப்போது எங்கு உள்ளீர்கள்’ என்பது குறித்து கேட்டனர். இதற்கு அந்தப் பெண், தன்னுடன் பணியாற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவரை காதலித்ததாகவும், தற்போது அவரையே திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த சமூகம் ஆபத்து நிறைந்தது, நாம் கவனமாக இருக்க வேண்டும். சமூகத்தில் நன்னெறிக்கு முக்கியத்துவம் தர வேண்டும். பெண் படித்தால் எதிர்காலம் நன்றாக இருக்கும். பெண்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என நினைத்து பெற்றோர் படிக்க வைக்கின்றனர். இதை பயன்படுத்தி விரும்பிய நபருடன் திருமணம் செய்யலாம் எனும் சூழல் நிலவுகிறது.

காதல் திருமணம் செய்து நன்றாக இருந்தால் மகிழ்ச்சி தான். குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக பெற்றோர் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள். காதலிப்பதற்காக அல்ல. காதல் திருமணம் என்பது பங்குச்சந்தை போல. ஏற்றமும் உண்டு, இறக்கமும் உண்டு. நீங்கள் விரும்பிய நபருடன் செல்வது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால், உங்கள் பெற்றோரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். நீங்கள் படித்தவர்கள், பெற்றோரிடம் முறையாக தகவல் தெரிவித்திருக்க வேண்டும். அவர்களை இப்படி நீதிமன்றத்தின் மூலமா, உங்களை காணச் செய்வது. உங்கள் பெற்றோரை சமாதானம் செய்திருக்கலாம். தற்போதைய கால கட்டத்தில் பெற்றோர், சூழலை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். உங்கள் காதல் கணவருடன் சென்று உங்கள் பெற்றோரை சமாதானம் செய்யுங்கள்’’ என்றனர்.

அப்போது நீதிமன்றத்திற்கு வந்திருந்த பெற்றோர், வயதான எங்களை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என கண்ணீர் வடித்தனர். இதையடுத்து நீதிபதிகள், ‘‘18 வயது நிறைவடைந்து விட்டதால் அந்த பெண் மேஜர். தன்னுடன் பணியாற்றிய மேற்கு வங்கத்தை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. தன்னை யாரும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கவில்லை என அந்தப் பெண் கூறியுள்ளார். எனவே, இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.

Related Stories: