கடலூர் மீனவர்கள் வலையில் 1 டன் எடையுள்ள ராட்சத திருக்கை மீன் சிக்கியது

கடலூர், டிச. 20: கடலூர் மீனவர்கள் வலையில் 1 டன் எடையுள்ள ராட்சத திருக்கை மீன் சிக்கியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் தாழங்குடா, தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி, சொத்திகுப்பம், ராசாபேட்டை உள்ளிட்ட கடற்கரை கிராம மக்களின் பிரதான தொழிலாக மீன்பிடித் தொழில் இருந்து வருகிறது. கடலூர் துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமான மீனவர்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில் 1 டன் எடை கொண்ட திருக்கை மீன் சிக்கியது. இதனை விசை படகு மூலம் மீனவர்கள் நேற்று கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர், கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் கிரேன் மூலம் படகில் இருந்து மீனை கரையில் இறக்கி வைத்தனர். இது குறித்து மீனவர்கள் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின்னர் மீன்பிடி தொழில் அதிகளவு பாதிப்பை சந்தித்து வருகிறது. புயல் சின்னம் மற்றும் வங்கக் கடலில் சூறைக்காற்று காரணமாக மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுகிறது. தற்போது மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் மீன்பிடி தொழில் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், ஆழ்கடலில் மீன்பிடித்தபோது, சுமார் 1 டன் எடையுள்ள திருக்கை மீன் சிக்கியுள்ளது. மருத்துவ குணம் கொண்ட இந்த மீனை குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சமைத்து கொடுப்பர். இருப்பினும் பிடிபட்ட மீன் பெரிய அளவில் இருப்பதால், வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது, என்றனர்.

Related Stories: