விருத்தாசலம், டிச. 20: விருத்தாசலம் அடுத்த திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் பயனடையும் வகையில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான நீர் வெளியேற்றம் நேற்று திறந்து விடுவதற்கான அரசாணை வெளிவந்துள்ளது. இதில் முதல் கட்டமாக கீழ் மட்ட வாய்க்கால் பகுதிகளான சிறுமுளை, பெருமுளை, வையங்குடி, கோவிலூர், சாத்தநத்தம், ஆதமங்கலம், மேலூர், நாவலூர், மருவத்தூர், எரப்பாவூர், நரசிங்கமங்கலம், வடகரை ஆகிய பகுதிகளுக்கு வெளியேற்றப்படுவது வழக்கம். அதன்படி நேற்று தண்ணீர் திறந்து விடுவதற்கான ஏற்பாடுகளை அரசு துறை நிர்வாகம் செய்து வந்தது.
இதுகுறித்து அறிந்த மேல்மட்ட வாய்க்கால் பகுதிகளான கோழியூர், ஆவினங்குடி, கொட்டாரம், செங்கமேடு, கொத்தட்டை, தொளார், தி.அகரம் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் இரண்டு பகுதிகளிலும் தண்ணீர் திறந்து விட வேண்டும். என அறிவித்து திட்டக்குடியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இது குறித்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அந்தோணி ராஜ், திட்டக்குடி தாசில்தார் உதயகுமார், பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் பாலமுருகன்,
கீழ் மட்ட வாய்க்கால் விவசாயிகளான சங்கர், மருதாச்சலம், முத்து மற்றும் மேல்மட்ட வாய்க்கால் பகுதி விவசாயிகளான பரமசிவம் தமிழரசன், வில்லாளன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.அப்போது கீழ்மட்ட பகுதிகளில் போர்வெல்கள் இல்லாததாலும், வருடத்திற்கு ஒருபோகம் மட்டுமே விவசாயம் செய்வதாலும், தற்போது தண்ணீருக்காக விவசாயிகள் காத்திருப்பதாகவும் முதற்கட்டமாக கீழ் மட்ட விவசாயி பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என அதிகாரிகள் கூறினர்.
இதற்கு மேல்மட்ட விவசாய பகுதி விவசாயிகள் தங்கள் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் இல்லாததால் போர்வெல் மட்டம் குறைகிறது. அதனால் இந்த தண்ணீர் வந்தால் தான் விவசாயம் செய்ய முடியும் எனவும் தெரிவித்தனர். இதனால் இருதரப்பு விவசாயிகளும் காரசாரமாக விவாதம் செய்தனர். மேலும் தண்ணீர் திறந்து விட்டால் இரண்டு பக்கமும் சரிவிகிதமாக திறந்து விட வேண்டும் இல்லை என்றால் திறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை கூட்டத்தில் உடன்பாடு ஏற்படாததால் இருதரப்பு விவசாயிகளும் வெளியேறினர்.
