மயிலம், டிச. 20: மயிலம் அருகே தனியார் பஸ்சை ஓட்டி சென்ற டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் மரத்தின் மீது மோதி பஸ் விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் காயமடைந்தனர். மயிலம் அடுத்துள்ள வி.சாலை கிராமத்தை சேர்ந்த அய்யனார் மகன் திருமலை (38). இவர் தனியார் பஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை திண்டிவனத்தில் இருந்து மயிலம், செண்டூர் வழியாக விழுப்புரம் நோக்கி பஸ்சை ஓட்டிச் சென்றுள்ளார். மயிலம்-விழுப்புரம் சாலையில் செண்டூர் அருகே சென்றபோது திடீரென டிரைவருக்கு வலிப்பு வந்து மயக்கம் ஏற்பட்டதால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கண்டக்டர், பயணிகள் 6 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
