கடலூர், டிச. 16: கடலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பெண் பெட்ரோல் கேன் கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதையொட்டி ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு, பொதுமக்களை மனு அளிக்க உள்ளே அனுப்பி வைத்தனர். அப்போது, 2 பெண் குழந்தைகளுடன் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மனு அளிக்க வந்தார். அவர் கொண்டு வந்த பையை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அதில் பெட்ரோல் கேன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அதை பறிமுதல் செய்த போலீசார், அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர் புவனகிரி தாலுகா சாமியார்பேட்டை கிராமத்தை சேர்ந்த சுகன்யா (30) என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கூறுகையில், கணவர் என்னை கொடுமைப்படுத்தியதால் அவரை பிரிந்து கூத்தப்பாக்கம் பகுதியில் வாழ்ந்து வருகிறேன். இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளை பேசி வருகின்றனர். எனது கணவர் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் எனது செல்போன் எண்ணை தவறாக சித்தரித்து பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனக்கும், எனது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத காரணத்தால், ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொள்ள வந்ததாக கூறி கதறி அழுதார். இதையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறி ஆட்சியரிடம் மனு அளிக்க அறிவுறுத்தினர். இதையடுத்து ஆட்சியரிடம் அப்பெண் மனு அளித்துவிட்டு சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
