பிரியாணிக்கு இலையுடன் முட்டி மோதிய மகளிர் பஞ்சு மிட்டாய், பாப்கான் சாப்பிட்டு அன்புமணிக்கு உறுதுணையாக இருக்கணும்

விழுப்புரம், டிச. 16: விழுப்புரம் அருகே தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணத்தில் பங்கேற்ற பெண்கள் பிரியாணி விருந்தில் இலைகளுடன் முட்டி மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே கூட்டத்துக்கு வந்துள்ள மகளிர் பஞ்சு மிட்டாய், பாப்கான் சாப்பிட்டு அண்ணன் அன்புமணிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்று சௌமியா பேசினார். பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில் ராமதாஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே பாமக சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனுக்களை அன்புமணி பெற்று வருகிறார். தனது கணவருக்கு உதவியாக கட்சியை வலுப்படுத்தும் வகையில் செளமியா அன்புமணி தமிழகம் முழுவதும் தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி நேற்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தென்னமாதேவியில் மகளிர் உரிமை மீட்பு பயணத்தில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது, இடைத்தேர்தலில் எப்போதும் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறுவார்கள், எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள். ஆனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக 59 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி அதை முறியடித்துள்ளது. வரலாற்று சாதனை படைத்த இந்த தொகுதிக்கு வந்ததில் மகிழ்ச்சி. காலையில் நீங்கள் வரும்போது உங்களுக்கு மல்லிப்பூ, வளையல் எல்லாம் நிர்வாகிகள் வாங்கி கொடுத்திருப்பார்கள். இது குடும்ப விழாவாக அழைத்து சாப்பாடு போட்டு மனநிறைவாக அனுப்ப வேண்டும். சின்னபொன்னு மாதிரி மனசில் கவலையெல்லாம் மறந்திட்டு பஞ்சு மிட்டாய் சாப்பிடனும்.

பாப்கான் சாப்பிட உங்கள் எம்எல்ஏ தயார் பண்ணி வச்சிருக்காங்க. தமிழகத்தில் அன்புமணி பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறார். நீங்கள்தான் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நீங்கள் கேட்காமலேயே கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் கொண்டு வந்தாங்க. உங்கள் அண்ணன் உங்களுக்காகத்தான் கொண்டு வந்தார். இலவச மருத்துவம் கொடுத்ததும் அன்புமணிதான். உங்களுக்காகத்தான் இதை செய்திருக்கிறார், இன்னும் பல திட்டங்களையும் வைத்திருக்கிறார். நாம் அனைவரும் அவர் பின்னால் நிற்க வேண்டுமென்று கூறினார்.

தொடர்ந்து சௌமியா அன்புமணி பேசிக் கொண்டிருந்தபோது, சுடச்சுட பிரியாணி தயார் செய்ததும் மகளிர்கள் சரசரவென கூட்டத்திலிருந்து வெளியேறினர். அங்கிருந்த நிர்வாகிகள் யாரும் செல்லாத வகையில் கதவுகளை இழுத்து மூடினர். தொடர்ந்து சௌமியா அன்புமணி பேசி முடித்ததும் பிரியாணி விருந்துக்கு மகளிர்கள் முண்டியடித்தனர். அப்போது ஒருவரையொருவர் முட்டித் தள்ளியபடி மோதிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் பொறுத்து பார்த்த மகளிர்கள் தாங்களே இலையை கையில் எடுத்துக் கொண்டு, தரையில் உட்கார்ந்து விருந்தை ருசிக்க தொடங்கினார். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் நிர்வாகிகளும் திண்டாடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

Related Stories: