குட்டிகளுடன் நாய் குறுக்கே வந்ததால் சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசு பஸ்

சிதம்பரம், டிச. 15: குட்டிகளுடன் நாய் குறுக்கே வந்ததால் சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் இறங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கந்தகுமாரன் பகுதியில் இருந்து நேற்று ஒரு அரசு பேருந்து 45 பயணிகளுடன் டி.நெடுஞ்சேரி, பூங்குடி, கண்ணங்குடி வழியாக சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை அருள்ஜோதி என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

கே.ஆடூர் கிராமத்தில் உள்ள கருங்காலி வாய்க்கால் பகுதி அருகே பஸ் வந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே திடீரென நாய் ஒன்று குட்டிகளுடன் வந்ததால், நாய் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பேருந்தை வலது புறமாக திருப்பியதாக கூறப்படுகிறது.

அப்பகுதி குறுகிய சாலை என்பதால் வாய்க்கால் ஓரமாக சுமார் 2 அடி பள்ளத்தில் இறங்கிய பேருந்து சாய்ந்து நின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கூச்சலிட்டு வேகவேகமாக பேருந்தை விட்டு  இறங்கினர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இன்றி தப்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Related Stories: