நிலக்கோட்டை, டிச.17: நிலக்கோட்டையில், கடையை உடைத்து ரூ.1.25 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நிலக்கோட்டை சங்கரன் சேர்மன் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(55). இவர் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் உள்ள வணிக வளாக கடையில் அரிசி மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு திண்டுக்கல்லிற்கு மளிகை சாமான்கள் வாங்குவதற்காக சென்றுவிட்டார்.
அப்போது மர்ம நபர்கள், மேற்கூரையை உடைத்து கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த கேமராவையும் உடைத்து விட்டு, கல்லாவிலிருந்த ரூ.1.25 லட்சம் பணத்தை திருடி சென்றனர். இது குறித்து முருகன், நிலக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
