ஜனவரி 5ம் தேதி திருவாரூரில் ஒன்றிய அரசை கண்டித்து ரயில் நிலையம் முற்றுகை போராட்டம்

திருவரூர், டிச. 18: தமிழ்நாட்டில் ஒரு லட்சம் வேலைவாய்ப்பை பறித்த ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூரில் ஜனவரி 5ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக இளைஞர் பெருமன்றம் அறிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட குழு கூட்டம் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் எதிர்கால கடமைகள் குறித்து மாவட்டச் செயலாளர் சரவணன் பேசினார். கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கேசவராஜ், க.மாரிமுத்து எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.

கூட்டத்தில் இளைஞர் பெருமன்ற மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.ஷேக்தாவூத், மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், பொருளாளர் கோபி, இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் பிவிசி கார்த்தி, தரன், பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எம்எல்ஏ மாரிமுத்து பேசியதாவது: முதன் முறை ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பிரதமர் நரேந்திரமோடி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தருவோம் என்று கூறினார்.

ஆனால் மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்ததும் மதக்கலவரங்களை உருவாக்கி, மக்களை
பிளவுப்படுத்தி, குறிப்பிட்ட ஒரு பகுதியினரை வெறியூட்டி அதிகாரத்துக்கு வந்தபின்னரும் வேலையின்மை பிரச்சினைக்கு மோடி அரசால் தீர்வுகாணமுடியவில்லை. இளைஞர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை உருவாக்கி கொள்ள வேலைக்கேட்டால் ஆன்மிகம், மதஉணர்வு குறித்து பிரச்சாரம் செய்து வேலையின்மை பிரச்சினையிலிருந்து அவர்களை திசை திருப்புகிற வேலையை கடந்த 11 ஆண்டுகாலத்தில் பாஜ அரசு செய்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களில் ஓய்வு, விருப்ப ஓய்வு, டிஸ்மிஸ் செய்யப்பட்ட லட்சக்கணக்கான பணிஇடங்களை நிரப்பாமல் உள்ளது ஒன்றிய அரவுசு. ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 40 லட்சம் பணியிடங்கள் இருந்த நிலையில் தற்போது 305 லட்சம் பணியிடங்களே உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டு இளைஞர்களை திட்டமிட்டு பாஜ அரசு புறக்கணிப்பதோடு, ஏற்கனவே இருந்த வேலைவாய்ப்புகளையும் திட்டமிட்டு பறித்து வருகிறது. தமிழ்நாட்டில் ரயில்வே, வங்கி, இன்சூரன்ஸ், பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத்துறை துறைகளில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு 3லட்சம் பேர் பணியாற்றினார்கள். தற்போது 2 லட்சம் பேர் மட்டும் பணியாற்றுகின்றனர்.

சுமார் 1 லட்சம் பேரின் பணியிடங்களை பறித்து விட்டு திருப்பரங்குன்றத்தில் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்றி மக்களை ஏமாற்ற பார்க்கிறது. இவ்வாறு அவர் பேசினார். மேலும், இதற்காக ஒன்றிய அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஜனவரி 5 திங்கள் கிழமை திருவாரூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு கூட்டத்தில் செய்யப்பட்டது.

Related Stories: