கைதான ஆசிரியர் சிறையில் அடைப்பு

தர்மபுரி, டிச.18: தர்மபுரி அருகே 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அரசு பள்ளி ஆசிரியரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் இரவு சிறையில் அடைத்தனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பகுதியில் செயல்படும் அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, மாவட்ட கல்வி அலுவலர் பெருமாள் மற்றும் கல்வி அதிகாரிகள், பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியர்கள், மாணவிகளிடம் விசாரித்தனர். இதன் பேரில், பாலியல் புகாருக்குள்ளான ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக, கல்வி அதிகாரிகள் நடத்திய விசாரணையை தொடர்ந்து, பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் மணிவண்ணன் (55) சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து, தர்மபுரி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், போக்சோ பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரித்து, நேற்று முன்தினம் இரவு ஆசிரியர் மணிவண்ணனை கைது செய்தனர். விசாரணைக்கு பின், அவரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories: