சம்பா: கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் அழிவைச் சந்தித்து வரும் இமாச்சலப் பிரதேசத்தில், இன்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்கள் மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த ஜூன் மாதம் 20ம் தேதியில் இருந்து பருவமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 276 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 1,104 வீடுகள் முழுமையாகவும், 37 கடைகள் மற்றும் தொழிற்சாலைகள், 2,416 மாட்டுத் தொழுவங்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. 27,552க்கும் மேற்பட்ட கால்நடைகளும், கோழிகளும் மழை வெள்ளத்தில் உயிரிழந்துள்ளன. குலு பகுதியில் உள்ள லக்காட்டியில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால், பூத்நாத் பாலம் அருகே சாலை சேதமடைந்தது. ஹனுமானி பாக் மற்றும் ரோப்டி புட்டி பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இப்பேரழிவுகளுக்கு மத்தியில், சம்பா மாவட்டத்தை இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் தாக்கின.
முதலில் அதிகாலை 3.27 மணியளவில், 20 கிலோமீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவில் 3.3 ஆக நிலநடுக்கம் பதிவானது. அதைத் தொடர்ந்து, அதிகாலை 4.39 மணியளவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவில் 4.0 ஆக மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், இந்த தொடர் நிலநடுக்கங்களால் பெரும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.
