இந்தூர்:மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தடை செய்யப்பட்ட சீன மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் டைல்ஸ் ஒப்பந்ததாரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மகர சங்கராந்தி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கூர்மையான சீன மாஞ்சா நூலால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில், இந்தூர்-தேவாஸ் புறவழிச்சாலையில் 16 வயது சிறுவன் ஒருவன் இதேபோன்று கழுத்து அறுபட்டு உயிரிழந்த சோக சம்பவம் ஏற்கனவே நடந்தேறியது.
இத்தகைய விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி முதல் வரும் 23ம் தேதி வரை செயற்கை இழை மற்றும் சீன மாஞ்சா விற்பனைக்குத் தடை விதித்துள்ளது. ஆனாலும், இந்தத் தடையை மீறி சட்டவிரோதமாக மாஞ்சா விற்பனை செய்யப்படுவதால் மீண்டும் ஒரு உயிர் பறிபோயுள்ளது. இந்தூர் ஓம் சாய் விஹார் காலனியைச் சேர்ந்த ரகுவீர் தாகத் (45) என்ற டைல்ஸ் ஒப்பந்ததாரர், நேற்று பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். கஜ்ரானா சதுக்கத்திற்கும் பெங்காலி சதுக்கத்திற்கும் இடைப்பட்ட சாலையில் சென்றபோது, எதிர்பாராத விதமாக காற்றில் பறந்து வந்த கூர்மையான சீன மாஞ்சா நூல் அவரது கழுத்தைச் சுற்றியது.
இதில் அவரது கழுத்தில் சுமார் இரண்டு அங்குல ஆழத்திற்கு பலத்த வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் துடித்த அவரைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிக ரத்தப்போக்கு காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பண்டிகை காலத்தை முன்னிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், சட்டவிரோத மாஞ்சா விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
