திருவனந்தபுரம்: ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று திருவனந்தபுரத்தில் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்துகிறார். இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், இடதுசாரி கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.கேரள அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஒன்றிய அரசு முடக்கி வருவதாக முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டி வருகிறார். இதைக் கண்டித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பினராயி விஜயன் தலைமையில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ஒன்றிய அரசைக் கண்டித்து திருவனந்தபுரத்தில் ஜனவரி 12ம் தேதி (இன்று) ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை 10 மணியளவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரம் தியாகிகள் நினைவிடம் அருகே போராட்டம் தொடங்கியது. இதில் முகம்மது ரியாஸ், சஜி செரியான், வீணா ஜார்ஜ், ராஜேஷ், ராஜீவ் உள்பட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், இடதுசாரி கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இன்று மாலை 5 மணி வரை போராட்டம் நடைபெறுகிறது.ஒன்றிய அரசு கேரளாவின் வளர்ச்சியை தடுத்து மாநில அரசையும், மக்களின் கழுத்தையும் நெரிக்கிறது. அரசியல் ரீதியாக ஒன்றிய அரசு கேரளாவை பழிவாங்குகிறது. இதைக் கண்டித்துத் தான் இன்றைய போராட்டம் நடைபெறுகிறது என்று முதல்வர் பினராயி விஜயன் தன்னுடைய முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
