பனாஜி: வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட விவகாரத்தில் முன்னாள் கடற்படை தளபதி மற்றும் அவரது மனைவியை விசாரணைக்கு வருமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய கடற்படையின் 20வது தளபதியாக 2004ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை பணியாற்றிய அட்மிரல் அருண் பிரகாஷ் என்பவர், கடந்த 1971ம் ஆண்டு நடைபெற்ற போரில் போர் விமானியாக சிறப்பாக செயல்பட்டதற்காக வீர் சக்ரா விருது பெற்றவர் ஆவார். பணி ஓய்வுக்குப் பிறகு கடந்த 2009ம் ஆண்டு முதல் கோவாவில் நிரந்தரமாக வசித்து வருகிறார்.
இவரது மனைவி குங்குமம் மேற்கு வங்கத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதும், அட்மிரல் பணியில் இருந்த காலத்தில் கடற்படை நலப்பணிகளில் தொடர்ந்து பங்காற்றியவர் ஆவார். இந்நிலையில் இம்மாதம் கோவாவில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின் போது, 2002ம் ஆண்டு பட்டியலில் இவர்களின் விபரங்கள் இல்லை எனக் கூறி, ‘வரைபடமாக்கப்படாத வாக்காளர்கள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணைக்காக 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு, 82 வயதான அருண் பிரகாஷ் வரும் 17ம் தேதியும், 78 வயதான அவரது மனைவி வரும் 19ம் தேதியும் நேரில் வர வேண்டும் என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து அருண் பிரகாஷ் ேநற்று தனது சமூக வலைதள பக்கத்தில் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர், ‘வாக்குச்சாவடி நிலைய அதிகாரி ஏற்கனவே மூன்று முறை வீட்டிற்கு வந்தும் தீர்வு காணப்படவில்லை, சிறப்பு திருத்தப் படிவங்கள் முறையாக செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது’ எனத் தெரிவித்துள்ளார். வயதான தம்பதியினரை தனித்தனி தேதிகளில் அலைக்கழிப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் பொதுவெளியில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தெற்கு கோவா மாவட்ட ஆட்சியர் எக்னா கிளீட்டஸ் இன்று விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘அட்மிரல் அளித்த விண்ணப்பங்களை அதிகாரிகள் மறுபரிசீலனை செய்வார்கள். இந்த விவகாரத்திற்கு தீர்வு காண அவரை நேரடியாக தொடர்பு கொள்வார்கள்’ என்றும் உறுதி அளித்துள்ளார். இதன் மூலம் இந்த சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
