பாலியல் பலாத்கார குற்றவாளியின் ஜாமீன் ரத்து; ஜாமீன் வழங்குவது இயந்திரத்தனமாக இருக்கக்கூடாது: உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் மைனராக உள்ள சிறுமி ஒருவரை கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு அண்மையில் ஜாமீன் வழங்கியிருந்தது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது, மருத்துவ அறிக்கைகள் மற்றும் அவர் அளித்த வாக்குமூலத்தை முறையாகக் கருத்தில் கொள்ளாமலும், குற்றத்தின் தன்மையை ஆராயாமலும் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

குறிப்பாக, குற்றம் சாட்டப்பட்டவருடன் சிறுமிக்கு சம்மதத்துடன் கூடிய உறவு இருந்ததாகத் தவறான கண்ணோட்டத்தில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நேற்று முன்தினம் வழங்கியத் தீர்ப்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. ‘ஜாமீன் வழங்குவது என்பது இயந்திரத்தனமாக இருக்கக்கூடாது; வழக்கின் முக்கிய சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களைப் புறக்கணித்து ஜாமீன் வழங்கக் கூடாது’ என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ‘பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாப்பு மற்றும் நியாயமான விசாரணையை உறுதி செய்வதே முக்கியம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை கீழமை நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது’ என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும், ‘பாலியல் பலாத்கார வழக்குகளில் ஜாமீன் வழங்கும் போது குற்றத்தின் தீவிரத்தன்மையை உணராமல் செயல்படக்கூடாது’ என்று எச்சரித்த நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்ட நபர் இரண்டு வாரங்களுக்குள் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: