சித்திரை திருவிழா கோலாகலம் திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி: திரளான பக்தர்கள் தரிசனம்

திருவையாறு: திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் நேற்று இரவு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்டம் திருவையாறில் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீஅறம் வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சித்திரை விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தன்னைத்தானே பூஜித்தல் கடந்த 9ம் தேதி மாலை நடைபெற்றது. 13ம் தேதி தேரோட்டம், நேற்று முன்தினம் சப்தஸ்தான பெருவிழா நடைபெற்றது.

காலை 5.30 மணிக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி சென்று அந்தந்த ஊர் சாமிகளுடன் இரவு காவிரி சங்கமித்தனர். பின்னர் நேற்று இரவு 9 மணியளவில் 7 சாமி பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்தது. இரவு தேரடியில் ஐயாறப்பருக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் தீபாராதனை முடிந்து 9.45 மணிக்கு அந்தந்த ஊர்களுக்கு பல்லக்குகள் புறப்பட்டு சென்றது. விழாவில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: