5 ஆண்டுகளுக்கு பின் 55 அடிக்கும் கீழே சென்ற மேட்டூர் அணையின் நீர்மட்டம்; நீர்தேக்க பகுதிகளில் வெளியே தெரியும் புராதன சின்னங்கள்..!!

தருமபுரி: மேட்டூர் அணை நீர்மட்டம் 55 அடிக்கும் கீழே சென்ற நிலையில், அணையின் நீர்த்தேக்க பகுதிகளான நாகமரை பரிசல்துறை பகுதியில் உள்ள புராதன சின்னங்கள் வெளியே தெரிய தொடங்கியிருக்கின்றன. பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் கர்நாடகா திறக்கவேண்டிய நீரை, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் திறக்காமல் போனதாலும் மேட்டூர் அணை தற்போது வறண்டு வருகிறது. கரையோர பகுதிகள் முழுவதும் தற்போது பாளம் பாளமாக வெடித்து காணப்படுகிறது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான நாகமரை, பன்னவாடி, கோட்டையூர், குருக்கலையனூர், செம்மேடு, ஏமனூர், வட்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் கரையோர பகுதிகள் முழுவதும் வறட்சி நிலவி வருகிறது. ஆங்காங்கே வெடித்த நிலையில் நீர்த்தேக்க பகுதி காணப்படுகிறது. சுமார் 55 அடிக்கும் கீழே மேட்டூர் அணையின் நீர்மட்டம் சென்றுள்ளது. இதனால்,அணையின் நீர்தேக்க பகுதிகளில் புராதன சின்னங்கள் வெளியே தென்படுகிறது.

அதாவது, நாகமரை பரிசல்துறை பகுதியில் மூழ்கிக்கிடந்த நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம், நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலய கோபுரம், கோட்டை சுவர் ஆகியவை முழுவதுமாக வெளியே தெரிகிறது. தொடர்ந்து 6 ஆண்டுகளாக வற்றாமல் இருந்த மேட்டூர் அணை கடந்த ஆண்டு வற்றியது. இந்த நிலையில், இந்த ஆண்டும் மேட்டூர் அணை வற்றி வருகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் 102 அடி மேட்டூர் அணையில் இருந்தது. ஆனால் தற்போது 54 கனஅடி நீர் மட்டுமே உள்ளது. நீர் வரத்து வெறும் 56 கனஅடி நீர் மட்டுமே வினாடிக்கு வந்து கொண்டுள்ளது. குடிநீருக்காக 1500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை கடும் வறட்சியை சந்திக்கும் என கூறப்படுகிறது.

The post 5 ஆண்டுகளுக்கு பின் 55 அடிக்கும் கீழே சென்ற மேட்டூர் அணையின் நீர்மட்டம்; நீர்தேக்க பகுதிகளில் வெளியே தெரியும் புராதன சின்னங்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: