ஆதித்யா தார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி வெளியான இந்தி படம், ‘துரந்தர்’. இதுவரை 1,100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கும் இப்படம், விரைவில் ரூ.1,300 கோடி வசூலை நெருங்கும் என்று தெரிகிறது. இதன்மூலம் ஆதித்யா தார், தனது இரண்டாவது படத்திலேயே ரூ.1,000 கோடி வசூல் இயக்குனருக்கான பட்டியலில் இணைந்துள்ளார். இதனால், வரும் மார்ச் மாதம் வெளியாகும் ‘துரந்தர் 2’ என்ற படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மலையாள முன்னணி இயக்குனரும், நடிகை கல்யாணியின் தந்தையுமான பிரியதர்ஷனிடம் ஆதித்யா தார் முதன்முதலில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
பிரியதர்ஷன் இயக்கிய ‘ஆக்ரோஷ்’, ‘தேஸ்’ ஆகிய இந்தி படங்களுக்கு வசனம் எழுதியிருந்தார். இந்நிலையில், தனது குரு பிரியதர்ஷன் பற்றி ஆதித்யா தார் வெளியிட்டுள்ள பதிவில், ‘எனது அன்புக்குரிய பிரியன் சார். நான் எனது கைகளில் சில பேப்பர்களுடனும், சிறிய நம்பிக்கையுடனும் உங்கள் அருகில் வந்து நின்றபோது, என்மீது முழு நம்பிக்கை வைத்தீர்கள். எதை செய்யக்கூடாது என்று பாலிவுட் கற்றுக்கொடுத்த நேரத்தில், எதை சரியாக செய்ய வேண்டும் என்று எனக்கு கற்றுக்கொடுத்தது நீங்கள்தான். எனது திரைப்பயணத்தில் ஒவ்வொரு அடியையும், உங்கள் பாதங்களை பின்பற்றியே நகர்ந்துள்ளேன். நான் எப்போதும் உங்கள் மாணவன்தான். எனது வெற்றி உங்கள் வெற்றியை போல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
