சென்னை: ஷங்கர் இயக்கி இருக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில், ஊழல் அமைப்புகளுக்கு எதிராகப் போராடி நீதியை நிலைநாட்டுகின்ற ஐஏஎஸ் அதிகாரி வேடத்தில் ராம் சரண் நடிக்க, அவரது ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். மற்றும் சமுத்திரக்கனி, காந்த் மேகா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஜெயராம் நடித்துள்ளனர். இப்படம் சங்கராந்தி பண்டிகை வெளியீடாக, வரும் ஜனவரி 10ம் தேதி பல்வேறு மொழிகளில் திரைக்கு வருகிறது. இந்நிலையில், சபரிமலை ஐயப் பன் கோயிலுக்குச் செல்வதற்காக விரதம் இருந்து மாலை அணிந் துள்ள ராம் சரண், ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருக்கும் புகழ்பெற்ற அமீன்பீர் பெரிய தர்காவில் நடந்த 80வது தேசிய முஷைரா கஜல் நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபாடு செய்தார்.
இதற்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பு விடுத்திருந்த நிலையில், தற்போது சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த நிலையில் ராம் சரண் அமீன்பீர் பெரிய தர்காவுக்கு வந்து வழிபாடு செய்தார். மேலும், அங்கு இருந்த துர்கா தேவி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். ராம் சரண் வருகையை அறிந்து கடப்பா நகரம் முழுக்க ரசிகர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த போலீசார் திணறினர். மேலும், ரசிகர்கள் மீது தடியடி நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.