வேலூர்: வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு நாளை துவங்கப்பட உள்ளது. முதற்கட்ட கலந்தாய்வில் 535 பேர் சேர்ந்தனர்.
வேலூர் அரசினர் முத்துரங்கம் கலைக்கல்லூரியில் உள்ள 984 இடங்களில் சேர 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் தரவரிசைப்பட்டியல், www.mgacvlr.edu.in எனும் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இருக்கும் மதிப்பெண் அடிப்படையில் குறிப்பிட்ட நாட்களில் நடக்கும் கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு, கலந்தாய்வில் பங்கேற்பது குறித்து, கல்லூரியில் இருந்து இ–மெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி முதற்கட்டமாக மதிப்பெண் தரவரிசை பட்டியல் அடிப்படையில், என்சிசி, விளையாட்டு, முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள், அந்தமான், நிகோபார் தீவுகளை சேர்ந்த தமிழர்கள் ஆகியோர்களுக்கு கலந்தாய்வு மற்றும் பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வில் 535 மாணவர்கள் பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து பொதுப்பிரிவுக்கான 2ம் சுற்று கலந்தாய்வு நாளை (17ம் தேதி) துவங்கப்பட உள்ளது. இதில் அறிவியல், கலை பாடப்பிரிவுகளான வரலாறு, பொருளியல், வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மையியல், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல், ஊட்டச்சத்து உணவு கட்டுப்பாட்டியல் ஆகிய பாடங்களுக்கான 2ம் சுற்றுக்கு 285 முதல் 261 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
18ம் தேதி 260 முதல் 251 வரை கட்ஆப் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 18ம்தேதி பிற்பகல் ஆங்கில மொழிப்பாடப் பிரிவுகளில் தமிழில் 50 முதல் 35 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. மேலும் மாணவர் சேர்க்கை கட்டணம், கலை மற்றும் வணிக பாடப்பிரிவுக்கு ₹1,556, அறிவியல் பாடப்பிரிவுக்கு ₹1,586, கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கு ₹686 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கல்லூரி அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் 2ம் கட்ட கலந்தாய்வு நாளை தொடக்கம்: இளநிலை பாடப்பிரிவில் 535 பேர் சேர்ந்தனர் appeared first on Dinakaran.