ஒடுகத்தூர், ஜூலை 21: மேலரசம்பட்டு கிராமத்தில் வாழை, நிலக்கடலை, நெற்பயிர்களை காட்டெருமைகள் கூட்டம் சேதப்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் சுற்றுவட்டாரத்தை சுற்றியுள்ள கிராமங்கள் அருகே வனப்பகுதி உள்ளது. இங்கு மான்கள், காட்டெருமை, காட்டுப்பன்றிகள், முயல், மயில்கள், பாம்பு வகைகள் மற்றும் பறவைகள் வசித்து வருகிறது. இங்கு ஏராளமான கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. விவசாயிகள், தங்கள் நிலங்களில் வாழை, கரும்பு, நிலக்கடலை, மற்றும் தீவனப்பயிர்களை பயிரிட்டுள்ளனர். சிலர் மா, தென்னை மரங்களையும் பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒடுகத்தூர் அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, நெல், நிலக்கடலை, தீவனப்பயிர்களை நேற்று காட்டெருமைகள் கூட்டம் சேதப்படுத்தி உள்ளது. காட்டெருமை வனப்பகுதிக்குள் நுழைவதை சிலர் செல்போனில் படம் பிடித்துள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘எங்கள் கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வந்த காட்டெருமை கூட்டம் வாழை, நிலக்கடலை, நெல் பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. அதிகாலையில் காட்டெருமைகள் வருவதால் எங்களால் அதனை தடுக்க முடிவதில்லை. இவ்வாறு பயிர்கள் சேதமாவதால் விவசாயம் செய்ய ஒவ்வொரு முறையும் வாங்கிய கடனைக்கூட திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்படுகிறோம். எனவே வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமான பயிர்களுக்கு விரைவாக நஷ்ட ஈடு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
The post ஒடுகத்தூர் அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டெருமைகள் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.
