10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள உரிய ஆவணங்கள் இணைக்காமல் வரும் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

வேலூர், ஜூலை 21: தமிழகத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்வதற்காக, உரிய ஆவணங்கள் இல்லாமல் வரும் விண்ணப்பங்களை நிராகரிக்க தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை, அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்துகிறது. தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிட்டு, மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடவடிக்கையின் போதே மாணவர்களின் பெயர், விவரங்களை திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். ஆனாலும், மதிப்பெண் சான்றிதழில் மாற்றம்கோரி பலர் தொடர்ந்து விண்ணப்பிக்கின்றனர்.

அத்துடன், உரிய ஆவணங்கள் இல்லாமல் விண்ணப்பிப்பதால், பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. இதனையடுத்து, வரும் நாட்களில் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களில், உரிய ஆவணங்கள் இல்வாதவற்றை நிராகரிக்க சிஇஓக்களுக்கு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் (பணியாளர்) மகேஸ்வரி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ள பலர் விண்ணப்பிக்கின்றனர். இதில், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் பெறப்படும் விண்ணப்பங்களுடன், உரிய ஆவணங்களை இணைத்தால் மட்டுமே அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு பரிந்துரை செய்து அனுப்ப வேண்டும்.

அதன்படி, தேர்வர் பெயர் மற்றும் பெற்றோர் பெயர் திருத்தம் மேற்கொள்ள, அசல் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 10ம் வகுப்பு மாற்றுச்சான்றிதழ் அசல் அல்லது தலைமை ஆசிரியரால் சான்றொப்பமிடப்பட்ட மாற்றுச்சான்றிதழ் நகல், தலைமையாசிரியரது கடிதம் மற்றும் கல்வி சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும். இதேபோல், பிறந்ததேதியில் திருத்தம் மேற்கொள்ள, அசல் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பள்ளி சேர்க்கை விண்ணப்பம், பள்ளி சேர்க்கை, நீக்கப் பதிவேடு, பத்தாம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ், தலைமையாசிரியரது கடிதம் மற்றும் கல்விச் சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

மேற்கண்ட இணைப்பு இல்லாத பட்சத்தில், சிஇஓ மற்றும் டிஇஓக்கள் அலுவலக அளவிலேயே விண்ணப்பங்களை நிராகரித்து சரியான ஆவணங்களை இணைத்து வழங்கும்படி மாணவர்களை அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், இவ்விவரங்களை அனைத்துப் பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து உரிய இணைப்புகளுடன் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான விண்ணப்பங்களை பரிந்துரை செய்யும்படி அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள உரிய ஆவணங்கள் இணைக்காமல் வரும் விண்ணப்பங்கள் நிராகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: