அதிக பயன்பாட்டு நேரங்களில் கூடுதல் மின்கட்டணம்: மின்வாரியம் சுறுசுறுப்பு

வேலூர், ஜூலை 22: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் பீக் அவர்ஸ் எனப்படும் அதிக பயன்பாட்டு நேரங்களில் கூடுதல் மின்கட்டணம் வசூலிக்க தற்போதுள்ள டிஜிட்டல் மின்மீட்டர்களுக்கு பதில் டிஓடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்த மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டில் மத்திய மின்சார ஆணையம் பீக் ஹவர் எனப்படும் அதிக பயன்பாட்டு நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க மின்நுகர்வோர் விதிகளில் மாற்றம் கொண்டு வந்தது. இவ்விதிகள் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வீடுகள், குடிசைகள் போன்ற மக்கள் வசிப்பிடங்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டு, வணிக இணைப்புகள், தொழிற்சாலைகள், தொழில் வணிக நிறுவனங்களுக்கு மட்டும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தை பொருத்தவரை தினமும் காலை, மாலையில் சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட் மின்நுகர்வும், மற்ற நேரங்களில் 15 ஆயிரம் மெகாவாட் அளவுக்கும் மின்நுகர்வு இருக்கிறது. இதனால் தொழிற்சாலை போன்றவற்றில் காலை, மாலையில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு, பீக் ஹவர் சார்ஜ் எனப்படும், உச்சநேரம் அதாவது அதிக பயன்பாட்டு நேர கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதன்படி, காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 முதல் இரவு 10 மணி வரையும் உச்சநேர மின் கட்டணமாக, ஒரு யூனிட் கட்டணத்துடன் 25 சதவீதம் கூடுதலாக சேர்த்து வசூலிக்கப்படுகிறது. அதேநேரத்தில் இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு யூனிட் கட்டணத்தில் 5 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதற்கு ஏற்ப உச்ச நேரம், சலுகை நேரம், மற்ற நேர மின்பயன்பாட்டை தனித்தனியே கணக்கெடுக்க டி.ஓ.டி. மீட்டர் பொருத்தப்படுகிறது.

தற்போது உயரழுத்த மின்இணைப்புகள், வணிக இணைப்புகளில் பெரும்பாலான இடங்களில் இந்த டி.ஓ.டி. மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் தாழ்வழுத்த பிரிவுகளில் 42 லட்சம் இணைப்புகளுக்கு இந்த மீட்டர் இன்னும் பொருத்தப்படவில்லை. இதில் முதல்கட்டமாக 26 ஆயிரம் இணைப்புகளுக்கு டி.ஓ.டி. மீட்டர் பொருத்த மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம், வடசென்னை, வேலூர், கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட 12 மண்டலங்களில் தற்போது பயன்பாட்டில் உள்ள 26 ஆயிரம் மும்முனை டிஜிட்டல் மீட்டர்களுக்கு பதிலாக டி.ஓ.டி. மீட்டர்களை பொருத்த வேண்டும்.

இதில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மண்டலத்தில் 5 ஆயிரம் மீட்டர்கள், கோவையில் 3,500, சென்னை (வடக்கு) 3 ஆயிரம், மதுரையில் 2500, வேலூர் மாவட்டத்தில் 500, ராணிப்பேட்டையில் 500, திருப்பத்தூர் மாவட்டத்தில் 500 என ஏறத்தாழ 1500 மீட்டர்களை டி.ஓ.டி. மீட்டர்களாக மாற்றவும் மேற்பார்வை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி மேற்பார்வை பொறியாளர்கள் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட மண்டலங்களுக்கு ஒதுக்கீடு செய்த மீட்டர்களை சரியாகப் பயன்படுத்தி தாழ்வழுத்த பிரிவில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் தங்கும் விடுதிகள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தற்போது பயன்பாட்டில் உள்ள டிஜிட்டல் மீட்டர்களை அகற்றிவிட்டு புதிய டி.ஓ.டி. மீட்டர்கள் பொருத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

The post அதிக பயன்பாட்டு நேரங்களில் கூடுதல் மின்கட்டணம்: மின்வாரியம் சுறுசுறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: