வாசிப்பு இயக்க புத்தகங்களில் இடம்பெறும் மாணவர் படைப்புகள் இன்று முதல் எமிஸில் ஆசிரியர்கள் பதிவேற்றலாம்

வேலூர், ஜூன் 16: வாசிப்பு இயக்கத்தின் 4ம் கட்ட புத்தகங்களை மாணவர்களின் படைப்புகளாக கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக எமிஸில் மாணவர் படைப்புகளை இன்று முதல் பதிவேற்ற ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் 4ம் கட்டமாக புத்தகங்கள் உருவாக்கப்படவுள்ள நிலையில், இந்தப் புத்தகங்கள் அனைத்தும் மாணவர்களின் படைப்புகளாகக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படைப்புகள் ஆசிரியர்கள் மூலம் எமிஸ் வழியாக அனுப்பப்படவுள்ள நிலையில், படைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காக ‘வாசிப்பு இயக்கம்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், குழந்தைகளின் வாசிப்பு நிலைக்கு ஏற்ப நுழை, நட, ஓடு, பற என்ற 4 பிரிவுகளில் புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன. பள்ளிகளுக்கு முதல் கட்டமாக 53 புத்தகங்கள், 2ம் கட்டமாக 70 புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில், 3ம் கட்டமாக 81 புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, 4ம் கட்டத்துக்காக புதிய புத்தகங்கள் தயாரிக்கப்பட உள்ளன. மாணவர்களின் படைப்புகளாக இவற்றை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் கதைகள், தேவைக்கேற்ப ஆசிரியர் குழுவால் வடிவமைக்கப்படும். வாசிப்பு இயக்கத்தின் அடிப்படைகளை புரிந்துகொண்டு, நுழை, நட, ஓடு, பற என்ற வகையின் கீழ் கதைகள் இருக்க வேண்டும்.

எளிய மொழியில், சிறிய வாக்கியங்களில் இருப்பது அவசியம். படைப்புகளை தமிழிலேயே அனுப்ப வேண்டும். ஒரு மாணவர் அதிகபட்சம் 5 கதைகள் அனுப்பலாம். தேர்வாகும் மாணவ எழுத்தாளரின் பெயர் புத்தக அட்டையில் அச்சிடப்படும். இதற்காக அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் படைப்புகளை இன்று முதல் ஜூலை 16ம் தேதி வரை ஆசிரியர்கள் எமிஸ் தளம் மூலம் அனுப்பலாம். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post வாசிப்பு இயக்க புத்தகங்களில் இடம்பெறும் மாணவர் படைப்புகள் இன்று முதல் எமிஸில் ஆசிரியர்கள் பதிவேற்றலாம் appeared first on Dinakaran.

Related Stories: