தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டத்தில் சில ஆண்டுகளாக குறுவை, சம்பா பருவங்கள் மட்டுமல்லாமல் கோடையிலும் பருவம் தவறி பெய்யும் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைகின்றன.
இந்நிலையில், பூதலூர், தஞ்சை, திருவையாறு, பாபநாசம், அம்மாப்பேட்டை, கும்பகோணம், திருப்பனந்தாள் உள்ளிட்ட வட்டாரங்களிலுள்ள காவிரி, வெண்ணாறு, குடமுருட்டி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆற்றங்கரையோரம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமடைந்து வருகின்றன.
நெற்பயிர்கள் மட்டுமல்லாமல் வாழை, வெற்றிலை, பருத்தி, காய்கறி உள்ளிட்ட பயிர்களையும் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இரவு நேரத்தில் கூட்டம் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் வயல்களில் படுத்து உருண்டு விளையாடுவதால், பயிர்கள் சேதமடைகின்றன. அவை பயிர்களைத் உண்ணாவிட்டாலும், தண்டு மற்றும் வேர்ப் பகுதியைக் கடித்துவிடுவதால், பயிர்களின் வளர்ச்சி பாதிக்கிறது.
இது குறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் முகமது இப்ராஹிம் கூறும்போது: காட்டுப்பன்றிகள் பகலில் ஆறுகள் மற்றும் ஆற்றங்கரையில் உள்ள கோரைப்புற்கள், புதர்கள், நடமாட்டம் இல்லாத தோப்புகள் உள்ளிட்டவற்றில் பதுங்கி இருக்கின்றன.
இருள் சூழ்ந்த பிறகு வயல்களுக்குள் புகுந்து நெல், வாழை, வெற்றிலை, பருத்தி, காய்கறி போன்ற பயிர்களில் தண்டு மற்றும் வேர் பகுதியைக் கடித்துதிண்கின்றன. இதனால் விவசாயிகள் மிகுந்த இடர்பாடுகளுக்கும் துயரத்துக்கும் ஆளாகின்றனர்.
இதனிடையே, பயிர்களைச் சேதப்படுத்துவது காட்டுப்பன்றிகள் என விவசாயிகள் கூறினாலும், அதை வனத்துறையினர் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்கின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், தஞ்சையில் காட்டுப்பன்றிகள் இருக்க வாய்ப்பில்லை. பன்றி வளர்ப்போர் இடம்பெயர்ந்து செல்லும்போது, பன்றிகளை விட்டுவிட்டுச் செல்கின்றனர்.
அவைதான் கட்டுப்பாடில்லாமல் வயல்களில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. பாபநாசம் அருகே பண்டாரவாடையில் வயலில் மின்சாரம் தாக்கி இறந்த பன்றியின் டி.என்.ஏ., ரோமம் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள வனவிலங்கு உயராய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பிறகு, அது காட்டுப்பன்றியா? என்பதை உறுதிப்படுத்த முடியும். என்றாலும், பன்றி வளர்ப்போரால் கைவிடப்பட்ட உள்ளூர் பன்றிகள்தான் பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. என்றனர்.
காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் பாதிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பெரும் சவாலாக மாறி வரும் காட்டுப்பன்றிகளைப் பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்கு அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தஞ்சை மாவட்டத்தில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் appeared first on Dinakaran.