உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

*அதிகாரிகளுக்கு துணை சபாநாயகர் உத்தரவு

கலசபாக்கம் : திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஊரக பகுதிகளில் 308 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக கடந்த 15ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 14ம் தேதிக்குள் கிராம பகுதிகளில் 81 முகாம்கள் நடத்தப்படுகிறது. ஊரக பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும்.

இதன்படி துரிஞ்சாபுரம் ஒன்றியம் சாலையனூர் கிராமத்தில் கமல புத்தூர், கார்கோணம், கோவூர் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நேற்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். பிடிஓ ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் அண்ணாமலை, தமயந்தி ஏழுமலை முன்னிலை வகித்தனர்.

பிடிஓ கோபு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் அரசு திட்டங்கள் வீடு தேடி செல்கிறது. உங்களுடன் ஸ்டாலின் முகாமை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கோரிக்கை மனுக்கள் வழங்கும்போது உரிய ஆவணங்களை இணைத்து வழங்க வேண்டும். வேளாண்துறை மூலம் அரசு திட்டங்களைப் பெற வேளாண் நிலங்கள் குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

எனவே விவசாயிகள் தங்கள் நிலங்கள் குறித்த விவரங்களை உரிய ஆவணங்களை கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு அளிப்பது இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரிகளை மக்கள் தேடி சென்ற காலம் மாறி தற்போது அதிகாரிகள் மக்களை தேடிச் சென்று துறைவாரியாக திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர் என்றார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் ராமஜெயம், பொதுக்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட பிரதிநிதி கருணாநிதி, ஒன்றிய பொருளாளர் ஏழுமலை, ஒன்றிய துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வினோத் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நேற்று நடைபெற்ற முகாமில் 400 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்வத்துடன் மனுக்கள் வழங்கினர்.

The post உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: