மணிமேகலை விருது பெறவுள்ள தர்மபுரி சக்தி மகளிர் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த விஜயலட்சுமி அவர்களே, கரூர் மாவட்டத்தை சேர்ந்த கீதம் மகளிர் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த சரண்யா அவர்களே, காணொலி காட்சி மூலமாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து இந்த நிகழ்ச்சியில் இணைந்துள்ள அமைச்சர் பெருமக்களே, நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களே, மாவட்ட ஆட்சித்தலைவர்களே, அரசினுடைய அனைத்து அலுவலர்களே, மணிமேகலை விருது பெற வந்துள்ள மற்றும் வங்கி கடன் இணைப்புகளை பெற வந்துள்ள அனைத்து சுய உதவிகுழுக்களைச் சேர்ந்த என் அருமை சகோதரிகளே, தமிழ்நாடு முழுவதும் காணொலி காட்சி மூலமாக இந்த நிகழ்ச்சியில் இணைந்து மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளே, பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய காலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
குழு சகோதரிகள் உங்களையெல்லாம் சந்தித்து, இந்த வங்கி கடன் இணைப்புகள் மற்றும் மணிமேகலை விருதுகள் வழங்குவதில் நான் மிகுந்த பெருமையடைகின்றேன், மகிழ்ச்சியடைகின்றேன். வருடம் முழுவதும் எத்தனையோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், நம்முடைய மகளிர் சுய உதவிக்குழுக்களின் நிகழ்ச்சிக்கு வருகின்ற பொழுது சொந்த வீட்டிற்கு, என்னுடைய உறவினர்களை, என்னுடைய சொந்த அக்காக்களை, தங்கைகளை பார்க்கின்ற அந்த உணர்வு எப்போதுமே இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் ஏற்படும். அந்த பாச உணர்வோடு தான் இந்த நிகழ்ச்சியிலும் நான் உங்களையெல்லாம் சந்திக்க வருகை தந்திருக்கின்றேன்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தான் 1989 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முறையாக மகளிர் சுய உதவிக்குழுக்களை ஆரம்பித்தார்கள்.
அதன்பிறகு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உள்ளாட்சி துறையின் அமைச்சராக இருந்தபோது இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த மகளிர் சுயஉதவிக்குழுக்களுடைய உழைப்பிற்கு அவர்களுக்கு அங்கீகாரத்தை கொடுத்து, அவர்களையெல்லாம் ஒவ்வொரு படியாக உயர்த்தி காட்டினார்கள்.கலைஞர் அவர்கள் சுய உதவி குழுக்களை தொடங்கினார். ஏதோ ஒரு திட்டத்தை தொடங்கிவிட்டோம். மகளிருக்கு கடன் உதவி கொடுக்கின்றோம். தொழில் செய்கிறார்கள் அவர்களே முன்னுக்கு வந்துவிடுவார்கள் என்று அவர் நிற்கவில்லை. அந்த குழுக்கள் எல்லாம், ஒவ்வொரு குழுவும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கலைஞர் அவர்கள் மிக உறுதியோடு இருந்தார். அதனால்தான், தமிழ்நாடு எங்கும் சிறப்பாக செயல்படுகின்ற அந்த குழுக்களுக்கு அந்த சகோதரிகளுக்கு ஒவ்வொரு வருடமும் இந்த மணிமேகலை விருகளை கலைஞர் அவர்கள் தான் அறிவித்து கொடுக்க ஆரம்பித்தார்.
சென்ற 10 ஆண்டு கால ஆட்சியில் இந்த விருதுகள் எல்லாம் கொடுக்காம நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், நம்முடைய கழக அரசு ஆட்சி அமைந்தவுடனே, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடனே இந்த விருதுகளை மீண்டும் கொடுக்க வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிட்டார். பெண் விடுதலையே மகளிர் முன்னேற்றத்திற்கான அடித்தளம் என்று முழங்கியதுதான் திராவிட இயக்கம். பெரியாருடைய பெண்ணுரிமை சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கின்ற ஆட்சியாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய ஆட்சி காலம் இருந்தது. இப்போது, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான நம்முடைய திராவிட மாடல் அரசும் பெண்கள் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
குடும்ப சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை உண்டு என்று இந்தியாவிலேயே முதன் முறையாக அந்த சட்டத்தை இயற்றியவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். அதுமட்டுமல்ல, காவல் துறையில் மகளிர் பணியாற்றலாம் என்ற நிலைமையை இந்தியாவிலேயே முதன் முறையாக உருவாக்கியவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். அதேபோல, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தை கொண்டு வந்து பல லட்சம் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்டவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு தமிழ்நாட்டில் 4,76,000 மகளிர் குழுக்கள் இருக்கின்றார்கள். அதில் 53,74,000 பேர் உறுப்பினர்களாக நீங்கள் இருக்கின்றீர்கள். தமிழ்நாட்டு மகளிருடைய சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக ஒரு மாபெரும் இயக்கமாக இன்றைக்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகிறீர்கள்.
நான் எந்த மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் போனாலும், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எனக்கு உத்தரவிட்டுருக்கிறார்கள். எந்த மாவட்டத்திற்கு போனாலும், அங்கு இருக்கக்கூடிய சிறப்பாக செயல்படக்கூடிய, இயங்கக்கூடிய மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளை வரவழைத்து அவங்களிடம் நீ பேச வேண்டும். அவர்களுடைய குறைகளையெல்லாம் நீ கேட்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள். அப்படி எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அந்த குழுக்களை சந்திப்பது என்னுடைய வழக்கம். சில மாதங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டத்திற்கு போயிருந்தேன். அங்கேயும் சுயஉதவி குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளை வரவழைத்து பேசினேன். அதே மாதிரி சென்ற ஒரு 15 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்றிருக்கும்போது அங்கு இருக்கக்கூடிய குழு சகோதரிகளையெல்லாம் வரவழைத்து அவர்களிடம் பேசினேன்.
குழுக்கள் மூலம் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய அந்த கடன் உதவி, பயிற்சி, பொருட்களுக்கான அந்த சந்தை வாய்ப்பு, அவை அவர்களுடைய வாழ்க்கையை எப்படி முன்னேற்றியிருக்கிறது என்பதை எல்லாம் அவர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். இந்த சந்திப்புகளின் போதெல்லாம், அந்த குழு சகோதரிகள் வைக்கின்ற கோரிக்கைகள் ஒவ்வொன்றையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு எடுத்து செல்வது வழக்கம். அதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக அவர்கள் என்னென்ன கோரிக்கை வைத்திருக்கிறார்களோ அதையெல்லாம் முடிந்த வரைக்கும் எவ்வளவு சீக்கிரம் முடியோ அதையெல்லாம் செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள்.
கோரிக்கை வைத்த 6 மணி நேரத்தில் பட்டா, 4 மணி நேரத்தில் வீடு என்று சுய உதவி குழுக்களின் சகோதரிகள் உங்கள் கோரிக்கைகளை எல்லாம் உடனடியாக நிறைவேற்றி கொடுப்பவர்தான் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். குழு மகளிருக்கான அடையாள அட்டை கொடுக்கப்பட இருக்கின்றது. மகளிர் தினத்தன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிமுகப்படுத்தினார். அந்த அடையாள அட்டை இருந்தால் நீங்கள் தயாரிக்கின்ற அந்த பொருட்களை கிராமம் மற்றும் நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்து செல்ல முடியும் என்ற நிலையை உருவாக்கி கொடுத்தவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்தான்.
இந்த கோரிக்கையும் திருவாரூரில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் சகோதரிகள் அவர்கள் வைத்த கோரிக்கை தான். இதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் சொன்னவுடனே, இதை செய்து கொடுங்கள் என்று கூறினார்கள். விரைவில் அந்த அடையாள அட்டை உங்களுக்கெல்லாம் கொடுக்கப்பட இருக்கின்றது.
இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால், மகளிர் குழுக்கள் என்ன உதவியை கேட்டாலும் உடனே செய்து கொடுங்கள் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். அதை தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
இதையே ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் நினைத்து பாருங்கள். குறிப்பாக 2011 முதல் 2021 வரை முந்தைய ஆட்சி காலத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. இப்பொழுது நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் எங்களுக்கு ஒரு இலக்கு கொடுத்து. அந்த குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். அந்த இலக்கு ஒவ்வொரு வருடமும் அதிகப்படுத்தப்பட்டு போயிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் எங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய இலக்கு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு கொடுத்திருக்கக்கூடிய இலக்கு 37,000 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்பு வழங்க வேண்டும் என்று கொடுத்திருக்கிறார்.
அதன்படி, தமிழ்நாடு முழுவது இன்றைக்கு மட்டும் சுமார் 3,76,000 பயனாளிகளுக்கு 3,130 கோடி ரூபாய் அளவிற்கு வங்கி கடன் இன்றைக்கு ஒரே நாளில் மட்டும் கொடுக்கப்பட இருக்கின்றது. அதுமட்டுமல்ல, இந்த 4 ஆண்டுகளில் மட்டும் 1,05,000 கோடி ரூபாய் அளவிற்கு வங்கி கடன் இணைப்புகளை நம்முடைய கழக அரசு வழங்கி இருக்கின்றது. இன்றைக்கு, மகளிர் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருவதால் தான் இந்தியாவிலேயே 9.69 சதவீதம் வளர்ச்சியோடு, இன்றைக்கு தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது என்றால், அதற்கு உங்களுடைய உழைப்பு, பங்களிப்பு, மகளிருடைய பங்களிப்பு இல்லாமல் இந்த வளர்ச்சி நிச்சயம் தமிழ்நாட்டிற்கு சாத்தியம் கிடையாது.
ஆகவேதான், நேற்று ஒரு நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர்அவர்கள் பேசும்போது கூட குறிப்பிட்டு பேசினார். தமிழ்நாட்டு பொருளாதாரத்துடைய முதுகெலும்பாக நம்முடைய மகளிர் நீங்கள் எல்லாம் இருக்கிருன்றீர்கள் என்று பெருமையாக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பேசினார்கள். இங்கே விருது பெறுகின்ற குழுக்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கின்ற விருது பெறாத குழுக்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்பதையும் நாங்கள் அறிவோம். மகளிர் முன்னேற்றத்திற்காக ஏராளமான திட்டங்களை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகின்றார். உங்களுக்கு தெரியும். சிலவற்றை மட்டும் நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
ஆட்சி வந்தவுடன் முதலமைச்சர் அவர்கள் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம். விடியல் பயண திட்டம்தான். அதுமட்டுமல்ல, பெண்கள் பள்ளிகூடத்திற்கு வரவேண்டும். பள்ளிகூடத்திற்கு வந்தால் மட்டும் பத்தாது, உயர்கல்வி படிக்க வேண்டும். கலேஜ் போகவேண்டும் என்று அரசு பள்ளியில் படிக்கக்கூடிய ஒவ்வொரு மகளிருக்கும் எந்த பிரைவேட் காலேஜ்ல போய் சேர்ந்தாலும். அவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக மாதம் 1000 ரூபாய் அவர்களுடைய வங்கி கணக்கில் வைக்கப்படும் என்று புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்தார். அதைவிட இன்னொரு முக்கியமான திட்டம் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஒவ்வொரு நாளும் 1 ஆம் வகுப்பிலிருந்து 5 ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய குழந்தைகள் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 22 லட்சம் குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றார்கள்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இப்படி ஒவ்வொரு திட்டத்தையும் மகளிர் முன்னேற்றத்தை மனதில் வைத்துக் கொண்டு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தீட்டிக்கொண்டு வருகின்றார்கள். செயல்படுத்தி வருகின்றார்கள். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில், இதுவரை எந்த அரசைக் காட்டிலும் திராவிட மாடல் அரசு முழுக்க, முழுக்க உங்களுக்கான அரசாக மகளிருக்கான அரசாக இயங்கி வருகிறது என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். இங்கே சுயஉதவிக்குழு மகளிருக்கு விளையாட்டு போட்டிகள் எல்லாம் நடத்தி இருக்கிறார்கள். நம்முடைய சகோதரி அவர்களும் அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். கோரிக்கையெல்லாம் வைத்தார்கள்.
விளையாட்டுப்போட்டினா அது மகளிருக்கான விளையாட்டு போட்டினா Soft ஆன விளையாட்டு போட்டியாக இருக்க கூடாது என்று நாங்கள் எல்லாம் திட்டமிட்டு செயல்படுத்தினோம். பொதுவாக பெண்கள் விளையாட்டு போட்டினா பார்த்தீர்கள் என்றால், மியூசிக்கல் சேர், கோலப்போட்டி, லெமன் இன்த ஸ்பூன் இந்த மாதிரி போட்டிகள் தான் நடத்துவார்கள். ஆனால், நானும் நம்முடைய அதிகாரிகளும் பேசி, ஏன் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கு அந்த விளையாட்டு போட்டி நடத்த வேண்டும் என்று, நாங்கள் உங்களுக்காக நடத்திய விளையாட்டு போட்டிகள் கால்பந்து, கோகோ, கபடி, கயிறு இழுத்தல் இப்படி Physical ஆக நீங்களும் ஆண்களைவிட இன்னும் சக்தி வாய்ந்தவர்கள் என்று நிரூபிப்பதற்காக ஒரு வாய்ப்பாக இந்த விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடத்தி காட்டியிருக்கின்றோம்.
இந்த போட்டிகளை நடத்திய அனைத்து அதிகாரிகளுக்கும் அதில் பங்கேற்ற அத்தனை பேருக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துக்களை, பாராட்டுக்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். அடுத்த வருடம் நீங்கள் இன்னும் நிறைய பேரிடம் சொல்லி, இன்னும் அதிகமான குழுக்கள், அதிகமான மகளிர் நீங்கள் விளையாட வரவேண்டும்., உங்களுடைய திறமைகளையெல்லாம் நீங்கள் வெளிக்காட்ட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன். மகளிர் நலன் காக்கின்ற நம்முடைய திராவிட மாடல் அரசினுடைய நல்லாட்சி இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்திட இங்கு வந்திருக்கக்கூடிய ஒவ்வொரு சகோதரியின் ஆதரவும் அன்பும் நிச்சயம் எங்களுக்கு வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த அரசிற்கு நீங்கள் அத்தனை பேரும் ஒரு பக்கபலமாக இருந்து, இந்த அரசினுடைய பிராண்ட் அம்பாசிட்டர்ஸ் இங்க வந்திருக்கக்கூடிய மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த நீங்கள் தான். அரசினுடைய திட்டங்களை, சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கொண்டுபோய் நீங்கள் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, இந்த அரசு என்றென்றும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு, மகளிர் சுயஉதவிக் குழு சகோதரிகள் நீங்கள் தொழில் முனைவோர்களாக வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக வருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இன்றைக்கு இந்த அரசு உங்களை கைதூக்கி விட்டுருக்கிறது. நீங்கள் இதில் சாதித்து நீங்கள் ஒரு பத்து பேரை நீங்கள் கைதூக்கி விட வேண்டும் என்பதையும் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். வங்கி கடன் இணைப்பு மற்றும் மணிமேகலை விருதுகளைப் பெற்ற அத்தனை சகோதரிகளுக்கும் மீண்டும் என்னுடைய அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்து விடைபெறுகின்றேன். நன்றி, வணக்கம் என்று துணை முதலமைச்சர் தெரிவித்தார்.
The post சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மாநில அளவிலான மணிமேகலை விருதுகள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி உரை!! appeared first on Dinakaran.