சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகேயுள்ள பர்லியார் பகுதியில் அரசு தோட்டக்கலை பண்ணையில் பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அரிய வகையான மங்குஸ்தான் பழ சீசன் தற்போது தொடங்கியுள்ளது.
பர்லியார் தோட்டக்கலைப் பண்ணையில் உள்ள மரங்களில் தற்போது இந்த பழங்கள் காய்த்து குலுங்குகிறது. இந்த மங்குஸ்தான் பழங்களை பர்லியார் மற்றும் குன்னூர் சாலையோர பழக்கடைகளில் விற்பனைக்காக வைத்துள்ளனர்.
இந்த மங்குஸ்தான் பழம் மருத்துவ குணம் கொண்டதாக கருதப்படுகிறது. உடலில் உள்ள விஷத்தை முறிக்கும், தோல் சம்மந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும், கண் எரிச்சலை நீக்கும் மற்றும் இதர பல்வேறு நோய்களை குணப்படுத்தும் தன்மையுடையது.
இந்த பழம் இந்தோனேசியாவில் மொலாக்க பகுதியை தாயகமாக கொண்டது. இதனை அவர்கள் ‘குயின் ஆப்பிள்’ என்று அழைப்பார்கள். சிகப்பு கரு நீலத்தில் உள்ள இந்த பழம் உள்பக்கம் வெள்ளை நிறத்தில் ஆரஞ்சு சுளைகள்போல் இருக்கும்.
பழத்தின் உள்ளே எத்தனை சுளைகள் உள்ளது என்பதை பழத்தின் அடி பகுதியில் உள்ள வட்டவடிவிலான அடையாளம் காட்டி விடும். இது எந்த ஒரு பழத்திலும் இல்லாத ஒரு சிறப்பம்சமாகும். இனிப்பும், புளிப்பும் கலந்து சுவையாக இருக்கும். இந்த பழம் தற்போது ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்து வரும் நிலையில், இதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
The post மங்குஸ்தான் பழ சீசன் தொடங்கியது appeared first on Dinakaran.
