இண்டேன் நிறுவனம் உற்பத்தியை பாதியாக குறைத்ததற்கு எதிர்ப்பு: எல்பிஜி லாரி உரிமையாளர்கள் நாளை மறுநாள் முதல் ஸ்டிரைக்

தமிழ்நாட்டில் எல்பிஜி லாரி உரிமையாளர்கள் நாளை மறுநாள் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதால் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. தமிழ்நாட்டில் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு ஈரோடு, சேலம், திருச்சி உள்ளிட்ட 12 இடங்களில் இண்டேன் சிலிண்டர் எரிவாயு நிரப்பும் மையங்கள் உள்ளன. அந்த இடங்களிலிருந்து நாள்தோறும் 4 லட்சம் சிலிண்டர்கள் லாரிகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இண்டேன் நிறுவனம் உற்பத்தி திறனை பாதியாக குறைத்ததை எதிர்த்தும், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை முன்வைத்து அபராதம் விதிப்பதை கண்டித்தும் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இப்பிரச்சனை தொடர்பாக பெருந்துறை சிபிக்காட்டில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டை போலவே ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி செல்லும் லாரி உரிமையாளர்கள் இந்தியன் ஆயில் கார்போரேஷன் நிறுவனத்தை எதிர்த்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக செந்தில் செல்வன் கூறினார். தமிழ்நாட்டில் வேலை நிறுத்தம் தொடங்கியவுடன் கர்நாடகா கேரளா மாநிலங்களில் எல்பிஜி லாரி உரிமையாளர்களும் களமிறங்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. எல்பிஜி லாரி உரிமையாளர்கள் போராட்டம் தீவிரமடைந்தால் தென் மாநிலங்களில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

 

The post இண்டேன் நிறுவனம் உற்பத்தியை பாதியாக குறைத்ததற்கு எதிர்ப்பு: எல்பிஜி லாரி உரிமையாளர்கள் நாளை மறுநாள் முதல் ஸ்டிரைக் appeared first on Dinakaran.

Related Stories: