இந்நிலையில் இந்தாண்டு கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு கோடை விழா நிகழ்ச்சிக்கு தேதிகளும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டு உள்ளன. மே மாதத்தில் நடைபெறும் கோடை சீசனை மகிழ்விக்கும் பொருட்டு மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்களும் தயாராகி வருகின்றன.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே மாதம் 23, 24 மற்றும் 25 ம் தேதிகளில் 65-வது பழக்கண்காட்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பூங்கா முழுவதும் சுமார் 2.60 லட்சம் மதிப்பில் பல்வேறு வகை மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர அரிய வகை பச்சை ரோஜா நாற்றுகள் வளர்க்கப்பட்டு பூங்காவின் பல்வேறு இடங்களிலும் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும் சிம்ஸ் பூங்காவில் மாடங்களில் அலங்கரிப்பதற்காக சுமார் 5 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகை மலர் நாற்றுகள் நர்சரியில் நடவு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவை தாயகமாக கொண்டுள்ள பல்வேறு மாநிலத்தில் இருந்து விதைகள் வரவழைக்கப்பட்டு, நடவு செய்யப்பட்ட நாற்றுகளில் தற்போது பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்து படைக்கும் மலர்கள் பழக்கண்காட்சியன்று பூங்காவில் அலங்கரிக்கப்பட உள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது மேரிகோல்ட், பிளாக்ஸ், ஜெனியா, மத்தியோலா ஐகானா, டேலியா, வெர்பனா உட்பட பல்வேறு வண்ண மயமான மலர்கள் பூத்து குலுங்கியதோடு, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாகி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பூக்களின் இடையே அமர்ந்து புகைப்படம் எடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகின்றனர். இதனிடையே நேற்று சிம்ஸ் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் பூக்களை கண்டு மகிழ்ந்தனர். மேலும் நடனமாடி வீடியோ எடுத்தும், புகைப்படங்கள் எடுத்தும் குதூகலம் அடைந்தனர்.
The post குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களை கண்டு சுற்றுலா பயணிகள் குதூகலம் appeared first on Dinakaran.