பரங்கிமலை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 மாணவர்கள் ரயில் மோதி பலி: செல்போனில் பேசியபடி சென்றதால் விபரீதம்

ஆலந்தூர், மே 13: பரங்கிமலை ரயில் நிலையம் அருகே, செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் இருவர், ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் உள்ள பரங்கிமலை ரயில் நிலையம், நேற்று காலை வழக்கம் போல் பரபரப்பாக காணப்பட்டது. அப்போது, செல்போனில் பேசியபடி வந்த 2 இளைஞர்கள் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது எழும்பூரில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரயில், அந்த வாலிபர்கள் மீது மோதியது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயரிழந்தனர். இதை பார்த்து பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.

தகவலறிந்து வந்த மாம்பலம் ரயில்வே காவல் ஆய்வாளர் வைரவன் மற்றும் போலீசார், 2 வாலிபர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விசாரணையில், உயிரிழந்தவர்கள் பெரம்பலூர் முகமது பட்டினம் பகுதியை சேர்ந்த முகமது நபூல் (20), சபீர் அகமது (20) என்பதும், இவர்கள் சென்னையில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் 4ம் ஆண்டு படித்து வந்ததும், ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி படித்து வந்ததும் தெரியவந்தது. நேற்று காலை இவர்கள், பரங்கிமலை ரயில் நிலையம் அருகே கிரிக்கெட் விளையாட தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி பலியானது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து மாம்பலம் ரயில்வே போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பரங்கிமலை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 மாணவர்கள் ரயில் மோதி பலி: செல்போனில் பேசியபடி சென்றதால் விபரீதம் appeared first on Dinakaran.

Related Stories: