தரமணியில் உள்ள ‘தமிழரசு’ இதழ் அலுவலகத்தில் கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில், மார்பளவு சிலை திறப்பு : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை: தரமணியில் உள்ள ‘தமிழரசு’ இதழ் அலுவலகத்தில் கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில் மற்றும் கலைஞர் மார்பளவு சிலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். கடந்த 1970ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கலைஞர் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையால் தொடங்கப்பட்ட ‘தமிழரசு’ இதழானது கடந்த 55 ஆண்டுகளாக, தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்களையும், சாதனைகளையும் தொகுத்து வழங்கி அரசின் அச்சு ஊடகமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆட்சி காலங்களில் 30 ஆயிரமாக இருந்த தமிழரசு மாத இதழ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1 லட்சம் என்ற இலக்கினை அடைந்ததையொட்டி; அதனை சிறப்பிக்கும் வகையில் கடந்த 2023ம் ஆண்டு மே.17ம் தேதி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 1 லட்சத்து 1வது சந்தாதாரருக்கு தமிழரசு மாத இதழை வழங்கிப் பாராட்டினார். ‘தமிழரசு’ இதழ் 55 ஆவது ஆண்டினை நிறைவு செய்யும் தருணத்தில், கடந்த 2023 ஜூன் 6ம் தேதியன்று நடைபெற்ற செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மண்டல இணை இயக்குநர்களின் பணி ஆய்வு கூட்டத்தில் முதல்வரின் ஆலோசனையின்படி, தரமணியிலுள்ள தமிழரசு அச்சக வளாகத்தில் கலைஞரின் நூற்றாண்டு நினைவாக “கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில்“ மற்றும் “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மார்பளவுச் சிலை“ ஆகியவற்றை அமைத்திட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ரூ.25 லட்சம் செலவில் கலைஞர் நூற்றாண்டு நினைவாக அமைக்கப்பட்டுள்ள, கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில் மற்றும் கலைஞரின் மார்பளவுச் சிலை“ ஆகியவற்றை நேற்றைய தினம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார். இதில் கலைஞரால் தொடங்கப்பட்ட தமிழரசு இதழின் காலந்தொட்டு, இதுநாள் வரையிலான தமிழரசு இதழின் வெற்றிப்பயணங்களின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டு கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இதனையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

The post தரமணியில் உள்ள ‘தமிழரசு’ இதழ் அலுவலகத்தில் கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில், மார்பளவு சிலை திறப்பு : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: