மே 12: ஏற்காடு கோடை விழாவுக்கு தோட்டக்கலை துறை சார்பில், 15 ஆயிரம் தொட்டிகளில் 2 லட்சம் மலர்கள் பராமரிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் முக்கிய கோடை வாசஸ்தலங்களில் ஒன்றான ஏற்காட்டிற்கு, ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கோடை சீசனில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகளை வருகின்றனர். நடப்பாண்டில் கோடை சீசன் களை காட்டியுள்ளது. ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் விடுமுறை நாட்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கோடை சீசன் களை கட்டியுள்ள நிலையில், ஏற்காட்டில் மே மாதம் 3வது வாரத்தில் கோடை விழா தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கி உள்ளது. ஏற்காட்டின் புகழ் பெற்ற ரோஸ் கார்டனில் தோட்டக்கலை துறையின் சார்பில், பூந்தொட்டிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
ஏற்காட்டின் குளிர்ந்த வானிலைக்கு ஏற்ற வகையில், மலைப்பகுதியில் மலர்கள் பூத்து குலுங்கும் நிலையில் உள்ளன.
அதேபோல், அண்ணா பூங்காவில் லட்சக்கணக்கான மலர்களால் உருவாக்கப்படும் பூச்செடி அலங்காரங்கள், பொம்மைகள் பார்வையாளரின் கவனத்தை ஈர்க்கும். மேலும் ஏற்காட்டில் விளைவிக்கும் பழவகைள் பற்றிய கண்காட்சிகளும் இடம்பெறும். தோட்டக்கலை துறை சார்பில் மலர்கண்காட்சி நடத்துவதற்கான முதல் கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்காட்டில் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தாவரவியல் பூங்கா, அண்ணா பூங்கா, ரோஸ் கார்டன் போன்ற இடங்களில் 40 வகையான மலர்களை கொண்டு 2 லட்சம் மலர் விதைகள் நட்டு, பராமரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, பால்சம், இனியாசால்வியா, ஜெரேனியம், பெட்டுனியா, மேரிகோல்ட் போன்ற செடிகள் வளர்க்கப்பட்டு, சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு அடுக்கி வைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், டேலியா செடிகள் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகள் மலர் படுகைகளில் நடவு செய்யும் நடைபெற்று வருகிறது. அனைத்து செடிகளையும் தயார்படுத்தும் பணியில் தோட்டக்கலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சிக்காக முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் கூறுகையில், ‘ஏற்காடு கோடை விழாவுக்கு 15 ஆயிரம் தொட்டிகளில் 50 வகையான மலர் செடிகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நடப்பாண்டு புதுவகையான மலர்களில் உருவங்கள் வைக்கப்படும்,’ என்றனர்.
The post ஏற்காடு கோடை விழாவுக்கு 15 ஆயிரம் தொட்டிகளில் 2 லட்சம் மலர்கள் பராமரிக்கும் பணி மும்முரம்சேலம், appeared first on Dinakaran.