இந்நிலையில் 2016ல் சாரதாவின் கணவர் குணவேலை, தியாகராஜன் கொலை செய்து சிறைக்கு சென்றுவிட்டு, ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து துபாய்க்கு வேலைக்கு சென்ற சாரதாவுக்கு, அங்கு வசித்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் சிகாமணி (47)யுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. அவருக்கு சாரதா ரூ.6 லட்சத்தை கொடுத்துள்ளார். அதை திருப்பி கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர் கோவை திரும்பிய சாரதா இதுபற்றி தியாகராஜனிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரை சமாதானப்படுத்த டிராவல்ஸ் அதிபர் சிகாமணி கடந்த 21ம் தேதி கோவை வந்தார். அவரை விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு சாரதா அழைத்து சென்றார். அங்கு அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி பசுபதிபாண்டியன் கூட்டாளி குட்டி தங்கம் என்கிற புதியவனை கோவைக்கு தியாகராஜன் வரவழைத்தார். 22ம் தேதி இரவு சிகாமணிக்கு மது மற்றும் இறைச்சியில் 30க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை, வலி நிவாரணி மாத்திரைகள் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, தியாகராஜன், புதியவன், சாரதா ஆகியோர் சிகாமணியின் உடலை கார் டிக்கியில் ஏற்றி கரூர் பொன்னமராவதி அடுத்த கே.பரமத்தி என்ற பகுதிக்கு கொண்டு சென்று வீசினர். அங்கிருந்து திருச்சி புறப்பட்டு சாரதா விமானம் மூலம் துபாய் சென்றார். புதியவன் நெல்லைக்கும், தியாகராஜன் கோவைக்கும் திரும்பினர். இந்நிலையில் சிகாமணியின் மனைவி பிரியா கோவைக்கு வந்து பீளமேடு போலீசில் சிகாமணி மாயமானதுபற்றி புகார் அளித்தார். இதற்கிடையே சிகாமணி உடலை கரூர் பொன்னமராவதி போலீசார் கைப்பற்றி அடையாளம் தெரியாத உடல் என கருதி அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் தியாகராஜன் கோவை கோர்ட்டில் சரணடைந்தார். அவரை பீளமேடு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கொலைக்கு உடந்தையாக இருந்த ரவுடி பசுபதிபாண்டியன் கூட்டாளி புதியவன் (48), தியாகராஜனின் கள்ளக்காதலி கோமதி (53), அவரது மகள் நிலா (33), மற்றும் அவர்களின் உறவினர் ஸ்வாதி (26) ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: டிரவால்ஸ் அதிபர் சிகாமணியை பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் கொலை செய்துள்ளனர்.
தியாகராஜன் தூத்துக்குடியை சேர்ந்தவர் என்பதால் ரவுடி பசுபதிபாண்டியன் கூட்டாளி புதியவன் அறிமுகமாகி உள்ளார். அதனால், புதியவனை உதவிக்கு கோவைக்கு வரவழைத்து உள்ளார். கோமதி வீட்டில் வைத்து சிகாமணியை கொலை செய்த போது கோமதி, நிலா, சாரதா மற்றும் அவர்களின் உறவினர் ஸ்வாதி ஆகியோர் தியாகராஜனுக்கு உதவி செய்துள்ளனர். இதனால், அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளார்கள். சாரதா குறித்து விசாரணை நடத்தியதில் அவர் துபாய்க்கு சென்ற ஓரிரு நாளில் மீண்டும் கோவைக்கு திரும்பி இருப்பது தெரியவந்தது.
தலைமறைவான அவரை தேடி வருகிறோம் விரைவில் கைது செய்யப்படுவார். மேலும், சிகாமணியின் உடலை கொண்டு செல்ல பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பரமத்தி பகுதியில் உள்ள மயானத்தில், கரூர் போலீசாரால் புதைக்கப்பட்ட சிகாமணியின் உடலை நேற்று காலை தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவை அனைத்தும் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிகாமணியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
* துபாயில் பாதுகாப்பு இல்லை கோவை திரும்பிய கள்ளக்காதலி
சிகாமணியை கொலை செய்து விட்டு சாரதா துபாய்க்கு தப்பி சென்றார். அங்கு இரண்டு, மூன்று நாட்கள் இருந்துள்ளார். பின்னர், சிகாமணியின் உறவினர்கள், நண்பர்கள், ஊழியர்கள் துபாயில் அதிகளவில் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்ட தகவல் தெரிந்தால் தனது உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என பயந்து மீண்டும் கோவை திரும்பி உள்ளார். அதனை போலீசார் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து போலீசார் 2 தனிப்படை அமைத்து சாரதாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
* லுக் அவுட் நோட்டீஸ்
சாரதா துபாயிலிருந்து கடந்த 28ம் தேதி திரும்பியதை உறுதி செய்த போலீசார், அவர் மீண்டும் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க கோவை மாநகர போலீசார் விமான நிலையம் மற்றும் துறைமுகங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
The post மது, இறைச்சியில் 30 மாத்திரை கலந்து கொடுத்து கொலை துபாய் டிராவல்ஸ் அதிபர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை: கள்ளக்காதலி உட்பட 3 பெண்கள், பசுபதி பாண்டியன் கூட்டாளி கைது appeared first on Dinakaran.