திருவாரூர் மாவட்டம் குடவாசலில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அரசு கல்லூரி கட்டுமான பணி

*விரைவாக முடிக்க கலெக்டர் உத்தரவு

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் குடவாசலில், ரூ.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அரசு கல்லூரி கட்டுமான பணிகளை விரைவாக முடிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் நேற்று அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி செல்லூர் என்ற இடத்தில் ரூ.15 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் அரசு கல்லூரிக்கான கட்டிட கட்டுமான பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தவுடன் பணியினை விரைவாகவும் உரிய தரத்துடனும் செய்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் மனப்பறவை என்ற இடத்தில் கலைஞர் கனவு இல்லம் வீடு கட்டுமான பணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஈம சடங்கு மண்டபம் கட்டுமான பணி மற்றும் மேலப்பாளையூர் என்ற இடத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் ரூ 4 கோடி 73 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பிரதம மந்திரி சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காவனூர் முதல் அடவங்குடி வரையிலான சாலை அமைக்கும் பணியினை ஆய்வு செய்தார்.

மேலும் காங்கேய நகரம் என்ற இடத்தில் கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணிகள் மற்றும் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ 7 லட்சத்து56 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் மதிய உணவு சமையல் கூடம் கட்டுமான பணி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த கலெக்டர் மோகனச்சந்திரன் அனைத்து பணிகளையும் உரிய தரத்துடன் விரைவாக முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

The post திருவாரூர் மாவட்டம் குடவாசலில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அரசு கல்லூரி கட்டுமான பணி appeared first on Dinakaran.

Related Stories: