தர்மபுரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பு தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா மீண்டும் தேர்வு: இளைஞர் அணி செயலாளராக விஜயபிரபாகரன் நியமனம், ஜன. 9ம் தேதி கடலூரில் மாநில மாநாடு

தர்மபுரி: தர்மபுரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிகவின் பொதுச்செயலாளராக பிரேமலதா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் இளைஞரணி செயலாளராக அவரது மகன் விஜயபிரபாகரன் நியமனம் செய்யப்பட்டார். தேமுதிக மாநில மாநாடு, வரும் ஜனவரி 9ம் தேதி, கடலூரில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே, தேமுதிக மாநில தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நேற்று நடந்தது.

மாநில அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், பொருளாளர் சுதீஸ், கிழக்கு மாவட்ட செயலாளர் குமார், மேற்கு மாவட்ட செயலாளர் விஜய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜயபிரபாகரனை நியமித்து, பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளராக விஜயபிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல், பொதுச்செயலாளராக நானும் (பிரேமலதா விஜயகாந்த்), மாநில அவைத்தலைவராக டாக்டர் இளங்கோவன்,

பொருளாளராக எல்கே சுதீஷ், தலைமை நிலையச் செயலாளராக பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளராக அழகாபுரம் மோகன்ராஜ், மாநில துணை செயலாளர்களாக பன்னீர்செல்வம், சந்திரன், செந்தில்குமார், சுபா ரவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிற நிர்வாகிகள் பின்பு அறிவிக்கப்படுவார்கள். தேமுதிக மாநில மாநாடு, ஜனவரி 9ம்தேதி கடலூரில் நடக்கும்.

234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, சட்டமன்ற தேர்தலை சந்திக்க போகிறோம். 234 தொகுதிகளிலும், பட்டி தொட்டி எங்கும் நானும், விஜயபிரபாகரனும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். தேர்தலில் கூட்டணி குறித்து, சரியான நேரத்தில் முடிவு எடுத்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில், பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷிடம், கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

* விஜயகாந்துக்கு பாரத ரத்னா விருது – தீர்மானம் நிறைவேற்றம்
தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில், அனைத்து மாவட்டத்திலும் தேமுதிகவிற்காக பணியாற்றி மறைந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் போப் பிரான்சிஸ் மறைவிற்கு தேமுதிக சார்பாக இரங்கலை தெரிவித்து, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

* ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு வன்மையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் எதிர் காலத்தில் நடைபெறாமல் இருக்க, மத்திய அரசு எல்லைகளை இன்னும் பலப்படுத்தி, சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளித்து, நாட்டை காக்க வேண்டும்.

* விஜயகாந்திற்கு ஒன்றிய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். அதே போல், தமிழக அரசு விஜயகாந்திற்கு மணி மண்டபம் அமைப்பதுடன், சென்னை 100 அடி சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்.

* வக்பு சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களின் சொத்துகளுக்கு எந்தவித பாதிப்பும், தீங்கும் ஏற்படாது என்பதை ஒன்றிய அரசு உறுதி செய்யவேண்டும்.

* சாதி வெறி தூண்டுதலால், மாணவர்கள் பழிவாங்கும் உணர்வுக்கும், போதைக்கு அடிமையாகும் நிலையை மாற்ற, வரும் கல்வி ஆண்டில் ‘நல் ஒழுக்கம்’ என்ற பாடப்பிரிவை செயல்படுத்தி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், காவல் துறை இணைந்து, மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

* தமிழகத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மதுபான விற்பனையை படிப்படியாக குறைத்து, முற்றிலும் நிறுத்த வேண்டும்.

* தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதையும், கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதையும் நிரந்தரமாக தடுக்க, தமிழக அரசு கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.

* மின்சாரம் மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, ஜி.எஸ்.டி வரியை குறைத்து, நெசவாளர்களின் கூலியை உயர்த்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.

* பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடிவிபத்துகளில் உயிரிழப்புகள் நிகழ்வதை தடுக்க, அரசு தனி கவனம் செலுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள பட்டாக ஆலைகளை ஆய்வு செய்து இனி உயிரிழப்புகளும், விபத்துக்களும் நடக்காத வண்ணம் மக்களை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* மகனுக்கு தந்தை மோதிரம் அணிவித்து தாய் வாழ்த்து
கூட்டத்தில், தேமுதிக இளைஞர் அணி செயலாளராக விஜயபிரபாகரனை நியமனம் செய்து, பிரேமலதா விஜயகாந்த் மேடையில் அறிவித்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து, இருக்கையில் இருந்து மேடைக்கு சென்ற விஜயபிரபாகரன், அங்கிருந்த விஜயகாந்த் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அவருக்கு விஜயகாந்த் அணிந்திருந்த மோதிரத்தை கைவிரலில் அணிவித்து, அட்சய திருதியை நாளான இந்த நல்ல நாளில், கேப்டனின் மோதிரத்தை அணிவிக்கிறேன் எனக்கூறி பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்தினார். அப்போது, அவரது காலில் விழுந்து வணங்கி விஜயபிரபாகரன் ஆசி பெற்றார்.

The post தர்மபுரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பு தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா மீண்டும் தேர்வு: இளைஞர் அணி செயலாளராக விஜயபிரபாகரன் நியமனம், ஜன. 9ம் தேதி கடலூரில் மாநில மாநாடு appeared first on Dinakaran.

Related Stories: