வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் திருவெண்ணெய்நல்லூர், மேல்மலையனூரில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

*மாவட்ட ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது, வளமிகு வட்டார வளர்ச்சியை உருவாக்கிடும் வகையில் மாநிலம் முழுவதும் 50 வட்டாரங்களை மாநில அரசு தேர்வு செய்து, ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தலா ரூ.5 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதொடர்பாக 50 குறியீடுகள் தேர்வு செய்யப்பட்டு, 7 கருப்பொருள்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பின்தங்கிய வட்டாரங்கள் மாவட்ட குறியீடுகளுக்கு இணையாக உயர்த்தப்பட வேண்டும். அவ்வாறு மாவட்ட குறியீடுகளுக்கு இணையாக உயர்த்தப்பட்ட குறியீடுகள் மாநில குறியீடுகளுக்கு இணையாக உயர்த்தப்பட வேண்டும் என்ற நோக்கில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர், மேல்மலையனூர் வட்டாரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், இக்கூட்டத்தில் கடந்த நிதியாண்டில் முடிக்கப்பட்ட திட்டப்பணிகள், நிலுவை திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நிலுவை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திட்டப்பணிகளுக்கான பயன்பாட்டு சான்றிதழ்களை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வு கூட்டத்தில், மாவட்ட திட்டக்குழு அலுவலர் நடராஜன், புள்ளியியல் அலுவலர் முத்துக்குமரன், வட்டார வளமையர் வினோதினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் திருவெண்ணெய்நல்லூர், மேல்மலையனூரில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: