அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் இந்தாண்டு இறுதிக்குள் 3000 கோயில்களில் குடமுழுக்கு

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சங்கரன்கோவில் ஈ.ராஜா (திமுக) பேசுகையில், ‘‘கடையநல்லூர் வட்டம் சேர்ந்தமரம் பிரகலாதீஸ்வரர் கோயிலுக்கு விரைந்து திருப்பணிகள் செய்து குடமுழுக்கு செய்ய அரசு ஆவன செய்யுமா?’’ என கேட்டார்.
இதற்கு பதிலளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், ‘‘சேர்ந்தமரம் பிரகலாதீஸ்வரர் கோயிலுக்கு 2002ம் ஆண்டு கடைசியாக குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தற்போது அந்த கோயிலுக்கு ரூ.25 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் 35 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதம் இருக்கின்ற பணிகள் இந்த நான்கு மாத காலங்களில் நிறைவுற்று குடமுழுக்கு நடத்தப்படும். இதுவரை 2859 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 3000 கோயில்கள் குடமுழுக்கு காணும்’’ என்றார்.

* எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பகுதிநேர ரேஷன் கடை கட்ட அரசு அனுமதிக்குமா?
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது மேட்டுப்பாளையம் ஏ.கே.செல்வராஜ் (அதிமுக) பேசுகையில், “சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் பகுதிநேர ரேஷன் கடைகள் கட்டுவதற்கு அனுமதி இல்லை என்று சொல்கிறார்கள். நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியில் கட்டுவதற்கு அனுமதிக்கிறார்கள். ஆகவே, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் பகுதிநேர நியாய விலைக்கடைகள் கட்டுவதற்கு அரசு அனுமதி அளிக்குமா?’’ என்றார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசுகையில், “புதிய கட்டிடத்தை நியாய விலைக் கடைகளுக்கு கட்டவேண்டும் என்று உறுப்பினர் தருகிற ஆர்வத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரத்தில் பகுதிநேர கடையைக் கட்ட வேண்டுமா, வேண்டாமா என்பது அந்தந்த மாவட்ட நிர்வாகம் ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக எடுக்கக்கூடிய முடிவுகள். ஆனால், பல மாவட்டங்களில் பகுதிநேர கடைகள் கட்டுவதற்கும் அனுமதிக்கிறார்கள். உறுப்பினர், உள்ளூர் மாவட்ட நிர்வாகத்தை அணுகி, உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

* கேள்வி கேட்க பட்டன் சிஸ்டம் அதிமுக எம்எல்ஏ கேள்விக்கு பேரவைத்தலைவர் பதில்
கேள்வி நேரத்தின் திருப்பரங்குன்றம் வி.வி.ராஜன் செல்லப்பா (அதிமுக) பேசுகையில், ‘‘கடைசி பெஞ்சில் இருக்கிற நாங்கள் எல்லாம் 100 முறை கையை தூக்கி, தூக்கி இந்த கூட்டத்தொடர் முடிக்கின்றபோது மிகப் பெரிய வாய்ப்பினை வழங்கியிருக்கிறீர்கள். ஒரு கருத்து. இந்த சட்டமன்றப் பேரவை முழுவதும் கணினிமயமாக்கப்பட்ட ஒரு சூழ்நிலை இருக்கிறது. அந்த வகையில் நாங்கள் அடிக்கடி கை தூக்குவதைவிட எங்களுக்கொரு பட்டன் சிஸ்டத்தை வைத்து விட்டீர்கள் என்றால், சட்டமன்றத்தில் வோட்டிங் பவர் போடுகிற மாதிரி நாங்கள் ஒரு பட்டனை அழுத்தி நீங்கள் எங்களுக்கு பேச வாய்ப்பு வழங்கலாமே..’’ என்றார். இதற்கு பதிலளித்து சபாநாயகர், ‘‘மானியக்கோரிக்கை புத்தகங்கள் 3 அல்லது 4 புத்தகங்களாக இருக்கும். முதல்வர் பொறுப்பேற்ற பிறகுதான், மானியக் கோரிக்கைகள் அனைத்தும் கையடக்க கணினியில் உங்களுக்கு அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. உங்களுடைய கருத்து நல்ல கருத்து. நிச்சயமாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று பரிசீலிக்கப்படும்’’ என்றார்.

The post அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் இந்தாண்டு இறுதிக்குள் 3000 கோயில்களில் குடமுழுக்கு appeared first on Dinakaran.

Related Stories: