இந்த நிலையில் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கண் திறத்தல் மற்றும் திநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி இன்று (13ம் தேதி) மாலை நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள திருநங்கைகள் மற்றும் வெளிநாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான திருநங்கைகளும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் பூசாரி கையால் தாலி கட்டிக் கொள்வார்கள். பின்னர் கோயில் அருகில் கற்பூரம் ஏற்றி கூத்தாண்டவரின் பெருமைகளை பாடல்களாக பாடி கும்மி அடித்து இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வார்கள்.
இதனைத் தொடர்ந்து நாளை காலை சித்திரை தேரோட்டம் நடக்கிறது. தேர் கோயிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பந்தலடிக்கு சென்ற பின் அரவான் களப்பலி நிகழ்ச்சி நடைபெறும். இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்த திருநங்கைகள் காலையில் தேரோட்டம் மற்றும் அரவான் களப்பலிக்கு பிறகு தாலியை அறுத்தும், குங்குமம் அழித்தும், வளையல்களை உடைத்தும் வெள்ளை புடவை உடுத்தி ஒப்பாரி வைத்து ஓலமிட்டு அழுவார்கள். பின்னர் தலைமுழுகி சோகத்துடன் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வார்கள். மாலையில் பந்தலடியில் பலிசோறு படைப்பார்கள். பின்னர் இரவு காளி கோயிலில் அரவான் உயிர் பெறுதல் நிகழ்ச்சியும், 15ம் தேதி விடையாதியும் 16ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
The post கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் இன்று மாலை திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி: நாளை சித்திரை தேரோட்டம் appeared first on Dinakaran.