ரூ.10.96 கோடி செலவில் 6 சார் கருவூல அலுவலக கட்டிடங்கள்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுகால நன்மைகளும் மற்றும் நிதித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவை பின்வருமாறு:
* மதுராந்தகம், அரக்கோணம், குளித்தலை, சீர்காழி, சாத்தூர் மற்றும் திருச்செந்தூர் ஆகிய ஆறு இடங்களில் ரூ.10.96 கோடி செலவில், தலா 3000 சதுர அடி பரப்பில், புதிய சார் கருவூல அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்படும்.
* அரசு தணிக்கையாளர்கள் மாறி வரும் சட்ட இணக்கங்களைப் பற்றி அறிந்திருப்பதை உறுதி செய்வதற்கும், செயல்திறனை அதிகரிப்பதற்கும், கணினி வழி தணிக்கை, செயல்திறன் தணிக்கை போன்ற வளர்ந்து வரும் துறைகளில் திறமையை மேம்படுத்துவதற்கும், தணிக்கை அறிக்கைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கும், அரசு தணிக்கையாளர்களின் தொழில்முறை மேம்பாட்டிற்காக ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
* தணிக்கை செயல்முறைகளின் நிகழ்நேர கண்காணிப்பை நெறிப்படுத்தவும், எளிதாக்கவும், அனைத்து தணிக்கை துறைகளிலும் ஒருங்கிணைந்த தணிக்கை மேலாண்மை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பயனுள்ள செயல்பாட்டை உறுதி செய்வதற்கும், தணிக்கையர்கள் மற்றும் தணிக்கை நிறுவனங்களின் சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய தலைமை தணிக்கை இயக்ககத்தில் ஒரு உதவி மையம் நிறுவப்படும்.
* தணிக்கையாளர்கள் உரிய காலத்தில் சட்ட இணக்கத்தை உறுதி செய்வதற்கும், வழக்குகளை எதிர்கொள்வதற்கும் உதவும் வகையில், அனைத்து தணிக்கை இயக்ககங்களுக்கும் பொதுவாக ஒரு சட்ட உதவி மையம் அமைக்கப்படும்.
* உரியவர்களுக்கு, தணிக்கைகளின் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் தணிக்கை கண்டுபிடிப்புகளை திறம்பட தெரிவிப்பது ஆகியவற்றை உறுதி செய்வதே ஒரு உயர் தரமான தணிக்கை அறிக்கையின் கூறாகும். இந்த நோக்கத்திற்காக, ஐசிஏஐ உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து தணிக்கையாளர்கள் மற்றும் தணிக்கை நிறுவனங்களுக்கான பட்டறைகள் நடத்தப்படும். இந்த பட்டறைகள் தணிக்கை அறிக்கைகளின் தற்போதைய கட்டமைப்பை விரிவாக மதிப்பாய்வு செய்து, தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

* கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்
சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலை தொடங்கியதும் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு கொண்டு வந்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் மறைவுற்ற செய்தியறிந்து இப்பேரவை ஆற்றொணாத் துயரம் கொள்கிறது. கஸ்தூரிரங்கன் மிகச்சிறந்த அறிவியலாளராக திகழ்ந்து, திட்டக் குழு உறுப்பினர், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தர் உள்ளிட்ட பல உயரிய பொறுப்புகளை வகித்தவர். மேலும், 2003-09ம் ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராக சிறப்புறப் பணியாற்றியவர். பத்மஸ்ரீ, பத்மபூஷண் மற்றும் பத்மவிபூஷன் ஆகிய உயரிய விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர். அன்னாரது மறைவினால் அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர், அறிவியலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இப்பேரவை ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கிறது” என்றார். இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையிலும், மறைந்த பெருந்தகைக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 மணித்துளிகள் அமைதி காத்தனர்.

The post ரூ.10.96 கோடி செலவில் 6 சார் கருவூல அலுவலக கட்டிடங்கள்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: