சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம், ஓஎம்ஆர், இசிஆர் அக்கரைக்கு மாநகர பேருந்துகள்: அமைச்சர்கள் சிவசங்கர், அன்பரசன் தொடங்கி வைத்தனர்

சென்னை, ஏப். 26: சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் விமான நிலையத்தில் இருந்து வெளியில் செல்லும் பயணிகள் வசதிக்காக, மாநகர பேருந்துகளை சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அதன்பேரில், விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம், ஓஎம்ஆர், இசிஆர் அக்கரைக்கு மாநகர பேருந்துகளை, அமைச்சர்கள் சிவசங்கர், தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். அதன்படி, தடம் எண்.எம்.ஏ.ஏ.1 (சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் பேருந்து முனையம்) 8 பேருந்துகள் 15 நிமிட இடைவெளியில் 84 பயண நடைகள் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் உயிரியல் பூங்கா வழியாக இயக்கப்படுகிறது. தடம் எண்.எம்.ஏ.ஏ.2 (சென்னை விமான நிலையம் – அக்கரை இசிஆர் சாலை) 7 பேருந்துகள் 30 நிமிட இடைவெளியில் 35 பயண நடைகள் பல்லாவரம், 200 அடி ரேடியல் சாலை, ஓஎம்ஆர் சாலை, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் வழியாக இயக்கப்படுகிறது.

இதேபோல், சென்னை விமான நிலையம்- அக்கரை இடையே மாநகர பேருந்து ஒவ்வொரு 30 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது. இந்த பேருந்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, பல்லாவரம், பல்லாவரம் மேம்பாலம் வழியாக, கீழ்கட்டளை சந்திப்பு, ஈச்சங்காடு, பள்ளிக்கரணை சந்திப்பு, துரைப்பாக்கம், ஓஎம்ஆர் சாலை, இசிஆர் சாலை வழியாக அக்கரை செல்ல இருக்கிறது. இந்த புதிய மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகளுக்கு மிகுந்த வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பேருந்துகள் இரவு பகல் என்று 24 மணி நேரமும் இயக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
இந்நிகழ்வின் போது, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பிரபுசங்கர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, விமான நிலைய இயக்குநர் தீபக், எம்டிசி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

புதிய வழித்தட பேருந்துகள்
ஆதம்பாக்கம் என்ஜிஓ காலனியில் இருந்து கிளாம்பாக்கம் கலைஞர் நுற்றாண்டு பேருந்து முனையம், தாம்பரத்திலிருந்து தெற்கு மலையம்பாக்கம் மற்றும் அனகாபுத்தூரிலிருந்து – பிராட்வேக்கு புதிய வழித்தட பேருந்துகளை அமைச்சர்கள் சிவசங்கர், தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தனர். அதன்படி தடம் எண்.66எம் தாம்பரத்திலிருந்து தெற்கு மலையம்பாக்கம் வரை 1 மகளிர் விடியல் பயண பேருந்து (வழி- பல்லாவரம், அனகாபுத்தூர், குன்றத்தூர், கொல்லச்சேரி, 400 அடி சாலை, மலையம்பாக்கம்) இயக்கப்படுகிறது. தடம் எண்.18எஸ் ஆதம்பாக்கம் என்ஜிஓ காலனி பேருந்து நிலையத்திலிருந்து – கிளாம்பாக்கம் வரை 2 மகளிர் விடியல் பயண பேருந்துகள் (வழி- கக்கன் பாலம், பிருந்தாவன் நகர், வானுவம்பேட்டை, தில்லை கங்கா நகர், மீனம்பாக்கம், தாம்பரம்) இயக்கப்படுகிறது. தடம் எண்.60 அனகாபுத்தூரிலிருந்து பிராட்வே வரை 1 மகளிர் விடியல் பயண பேருந்து (வழி- பல்லாவரம், மீனம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம் தேனாம்பேட்டை) இயக்கப்படுகிறது.

The post சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம், ஓஎம்ஆர், இசிஆர் அக்கரைக்கு மாநகர பேருந்துகள்: அமைச்சர்கள் சிவசங்கர், அன்பரசன் தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: