தரமணி ரயில் நிலையம் அருகே மதுபானம் வாங்கி கொடுத்து வாலிபர் வெட்டிக்கொலை:  போலீசில் 3 பேர் சரண்  பரபரப்பு வாக்குமூலம்

வேளச்சேரி, மே 13: தரமணி ரயில் நிலையம் அருகே, மதுபானம் வாங்கி கொடுத்து வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுசம்பந்தமாக 3 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். தரமணி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் அஸ்வின் (25). பெயின்டிங் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த இவரை, ஆட்டோவில் வந்த 3 பேர், மது அருந்த கட்டாயப்படுத்தி அழைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில், தரமணி ரயில் நிலையம் அருகே உடல் முழுவதும் பலத்த வெட்டுக் காயங்களுடன் அஸ்வின் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த தரமணி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அஸ்வின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர். இதனிடையே, அஸ்வினை கொலை செய்ததாக, தரமணி காவல் நிலையத்தில் நேற்று அதிகாலை 4 மணிக்கு 3 வாலிபர்கள் சரணடைந்தனர். விசாரணையில் அவர்கள் தரமணி, அகத்தியர் தெருவை சேர்ந்த மோகனசுந்தரம் (26), கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் பரத்ராஜ் (19), சங்கர் (23) என்பதும், முன் விரோத தகராறில் அஸ்வினை திட்டமிட்டு கொன்றதும் தெரியவந்தது.

அவர்கள் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: கைதான மோகனசுந்தரம், சங்கர், பரத்ராஜ் ஆகிய 3 பேருக்கும், கொலையான அஸ்வினுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் துக்க நிகழ்ச்சி ஒன்றில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அஸ்வின் தனது நண்பர்களுடன் சேர்ந்த இந்த 3 பேரையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அஸ்வினை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அஸ்வின் வீட்டிற்கு சென்று, ‘நமக்கும் சண்டை வேண்டாம். நாம் சமாதானமாக செல்ேவாம். இனிமேல் நண்பர்களாக பழகுவோம்,’ என கூறியுள்ளனர். பின்னர், மது அருந்தலாம் வா, என அஸ்வினை கட்டாயப்படுத்தி, ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளனர். பின்னர், டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டு, தரமணி ரயில் நிலையம் அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அஸ்வினுக்கு போதையானதும், 3 பேரும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டி கொன்றுள்ளனர். பின்னர், அங்கிருந்து நேராக பள்ளிக்கரணைக்கு சென்று, அங்குள்ள குளத்தில் கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் செல்போனை வீசிவிட்டு சென்றுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post தரமணி ரயில் நிலையம் அருகே மதுபானம் வாங்கி கொடுத்து வாலிபர் வெட்டிக்கொலை:  போலீசில் 3 பேர் சரண்  பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Related Stories: