சென்னை, மே 6: தமிழ்நாடு காவல்துறை வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கடந்த 2ம் தேதி சென்னைக்கு வந்தபோது குண்டு துளைக்காத வாகனமும் மற்றும் அவருடன் மத்திய பாதுகாப்பு படையினர் பயணிப்பதற்காக 2 வாகனங்களும், ஒரு ஆம்புலன்ஸ் மற்றும் அரசு மரபு வாகனம் மூன்றும் வழங்கப்பட்டது.கடந்த 3ம் தேதி எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டு விட்டு, மதியம் அங்கிருந்து புறப்பட்டு வேலூர் பொற்கோயிலுக்கு சென்றார். பின்னர் மாலை 5.30 மணியளவில் வேலூரிலிருந்து புறப்பட்டு ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா சென்னை திரும்பினார். இரவு 7.30 மணியளவில் வண்டலூர் -மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் திருமுடிவாக்கம் அருகில் வந்து கொண்டிருந்தனர்.
குண்டுதுளைக்க முடியாத வாகனங்கள் கொண்டவை என்பதாலும், தொழில்நுட்ப காரணங்களுக்காகவும் இவற்றை மற்ற வாகனங்களின் வேகத்திற்கு இணையாக இயக்குவதில்லை. ஆனால், ஒன்றிய அமைச்சரின் நேர்முக உதவியாளர் வற்புறுத்தியதின் பேரில் வாகனங்கள் மணிக்கு 120 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில் இயக்கினர். அதனால் குண்டு துளைக்காத காரை மற்ற வாகனங்களுக்கு இணையான வேகத்திற்கு இயக்க முற்பட்டபோது பின்பக்க சக்கரத்தில் உருவான உராய்வு சத்தத்தை அறிந்து ஓட்டுநர் அந்த வாகனத்தை ஒன்றிய அமைச்சரின் பாதுகாப்பு கருதி வாகனத்தின் வேகத்தை குறைத்து சாலை ஓரத்தில் நிறுத்தினார். உடனடியாக ஒன்றிய அமைச்சர், அரசு மரபின்படி வழங்கப்பட்ட மாற்று வாகனத்தில் ஏற்றி உரிய பாதுகாப்புடன் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இதில் அமைச்சர் பயணம் செய்த வாகனத்திற்கு எவ்வித சேதமோ அதன் உள்ளிருந்தவர்களுக்கு எவ்வித பாதுகாப்பு குறைபாடோ ஏற்படவில்லை.
The post ஜே.பி.நட்டா மாற்று வாகனத்தில் பயணம் காவல்துறை விளக்கம் appeared first on Dinakaran.