ஓடிஏ நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 2வது நுழைவாயில் பணி விரைவில் தொடங்கும்: நிர்வாக அதிகாரி தகவல்

சென்னை, மே 13: ஓடிஏ நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 2வது நுழைவாயில் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 2015ம் ஆண்டு முதல் சென்னையில் விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல் – பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதை தொடர்ந்து தற்போது ₹63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது.

இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைய உள்ளன. இந்த பணிகளை 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விமான நிலையம் – விம்கோ நகர் வழித்தடத்தில் உள்ள ஓடிஏ நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் மாற்றப்பட்ட நங்கநல்லூர் ெமட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் நுழைவாயில் மற்றும் வெளியேற ஒரே ஒரு வழி மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலையில் விமான நிலையத்தை நோக்கி செல்லும் பக்கத்தில் இந்த வழி அமைக்கப்பட்டுள்ளதால் எதிர் திசையில் இருந்து வரும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். சாலையை கடந்து நுழைவாயிலை அடைவது, ஆட்டோக்களில் அதிக கட்டணம் உள்ளிட்ட பிரச்னைகளை கடந்த 9 ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.

இதனால் எதிர் திசையில் ஒரு நுழைவாயில் ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், இந்த திட்டத்திற்கான டெண்டர் கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ அதிகாரி கூறியதாவது: ஓடிஏ நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 2வது நுழைவாயில் அமைப்பதற்கு தேவையான இடம் அதிகாரிகள் பயிற்சி அகாடமிக்கு சொந்தமான இடமாக உள்ளதால் தற்போது வரை தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அனுமதி பெறப்பட்டுள்ளது. அதன்படி இன்னும் சில மாதங்களில் நுழைவாயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த நுழைவாயிலில் படிக்கட்டுகள், எஸ்கலேட்டர்கள், லிப்ட் உள்ளிட்டவையுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட்டு 2026ம் ஆண்டுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். இந்த திட்டத்திற்கான டெண்டர் கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களில் ஒப்பந்தக்காரர் இறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post ஓடிஏ நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 2வது நுழைவாயில் பணி விரைவில் தொடங்கும்: நிர்வாக அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: