கால்வாய் பணிகள் நிறைவு பெற்றதால் கண்டலேறு அணையில் இருந்து மீண்டும் 500 கன அடி நீர் திறப்பு: தமிழக எல்லையை 4 நாளில் வந்தடையும்

சென்னை, மே 6: ஆந்திராவில் நடந்த கால்வாய் பணி நிறைவடைந்ததையடுத்து, கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லைக்கு 3 அல்லது 4 நாளில் வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மக்களுக்கு மேற்பரப்பு நீர்த்தேக்கங்கள், நிலத்தடி நீர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் ஆகியவை மூலம் குடிநீர் பெறப்படுகிறது. குறிப்பாக புழல் ஏரி, சோழவரம் ஏரி, பூண்டி ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவற்றிலும், கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்தும் சென்னைக்கு குடிநீர் பெறப்படுகிறது. இவற்றின் மொத்த கொள்ளளவு 12,722 மில்லியன் கன அடி ஆகும்.

இத்துடன், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுக்கு 12 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் பெறுவதற்கான ஒப்பந்தமும் நடைமுறையில் உள்ளது. ஆனால், பருவமழையை பொறுத்து உரிய காலத்தில் இந்த தண்ணீர் பெறுவதில் சிக்கல் உள்ளது. இவற்றை தவிர வடசென்னைக்கு வடக்கில் மீஞ்சூரிலும், தென்சென்னைக்கு தெற்கில் நெம்மேலியிலும் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் அமைக்கப்பட்டு, அவற்றின் மூலமும் குடிநீர் பெறப்படுகிறது. மேலும், கூடுதலாக நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்டதும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்டதுமாக இரண்டு புதிய கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இதில், 3 டிஎம்சி சேதாரம் போக, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இந்நிலையில், ஆந்திர அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் திறக்க வேண்டிய தண்ணீரை தமிழகத்திற்கு திறக்காததால், தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கடிதம் எழுதினர்.

இதையடுத்து தமிழக அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த மார்ச் 24ம் தேதி வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர், கண்டலேறுவில் திறக்கப்பட்ட தண்ணீர் 152 கி.மீட்டர் கடந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கு கடந்த மார்ச் 28ம் தேதி வந்தடைந்தது. கிருஷ்ணா நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கண்டலேறு அணையில் கூடுதலாக 300 கன அடி வீதம் 800 கன அடியாகவும், பின்னர் படிப்படியாக உயர்த்தி தற்போது 1340 கன அடியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு 316 கன அடியாகவும் அதிகரித்து வந்து கொண்டிருந்தது. கடந்த மாதம் 27ம் தேதி ஆந்திர பகுதியில் கால்வாய் பணிகள் நடந்ததால் தற்காலிகமாக தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதுவரை பூண்டி ஏரிக்கு 500 மில்லியன் கன அடி (அரை டிஎம்சி) தண்ணீர் கிடைத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், கால்வாய் பணிகள் நிறைவு பெற்றதால், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து நேற்று பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லைக்கு 3 அல்லது 4 நாளில் வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கால்வாய் பணிகள் நிறைவு பெற்றதால் கண்டலேறு அணையில் இருந்து மீண்டும் 500 கன அடி நீர் திறப்பு: தமிழக எல்லையை 4 நாளில் வந்தடையும் appeared first on Dinakaran.

Related Stories: